பெரியார் வீட்டு வாரிசு.. நடிகர் திலகம் சிவாஜியின் ஆதரவாளர்.. காங்கிரஸின் தலைவர்.. யார் இந்த ஈவிகேஎஸ்!
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் நவம்பர் 11ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
![பெரியார் வீட்டு வாரிசு.. நடிகர் திலகம் சிவாஜியின் ஆதரவாளர்.. காங்கிரஸின் தலைவர்.. யார் இந்த ஈவிகேஎஸ்! பெரியார் வீட்டு வாரிசு.. நடிகர் திலகம் சிவாஜியின் ஆதரவாளர்.. காங்கிரஸின் தலைவர்.. யார் இந்த ஈவிகேஎஸ்!](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/14/550x309/evks_1674395763579_1734163256852.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. ஈவிகேஎஸ் மறைவு காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கு யார் இந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
யார் இந்த ஈவிகேஎஸ்
தந்தை பெரியாரின் குடும்ப வாரிசுகளில் ஒருவர். தந்தை பெரியாரின் சகோதரர் கிருஷ்ண சாமியின் பேரன். சொல்லின் செல்வர் சம்பத்தின் மகனாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டிசம்பர் 21, 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பயின்று பட்டம் பெற்றார். பெரியாரின் குடும்ப வாரிசு என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்.
அரசியல் ஆரம்பம்
கடந்த 1984ல் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர். அவரையே அரசியல் குருவாக பார்த்தார்.
சிவாஜியின் பரிந்துரையின் பேரில் 1984ல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
எம்ஜிஆர் மறைவை தொடர்ந்து ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஜானிகியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்த நிலையில் காங்கிரஸ் அதரவளிக்க மறுத்தது. குறிப்பாக ஒருங்கிணைந்த அதிமுகவையே ஆதரிப்போம் என்றார் அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் பிரதமருமான ராஜீவ் காந்தி. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கருத்து வேறுபாடு எழுந்தது. அப்போது ஜானகிக்கு ஆதரவளிக்க வலியுறுத்தினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசேன். அந்த சிவாஜியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பதவி விலகுவதாக அறிவித்தவர்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் ஒருவர்.
பின்னர் சிவாஜி ஆரம்பித்த தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியின் சார்பில் பவானி சாகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2004 மக்களவைத்தேர்தலில் கோபி. மக்களவைத் தொகுதியில் வென்று, 2009 வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய இணையமைச்சராக செயலாற்றினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி:
2000-02, 2014 - 16ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்தார், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
மகன் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்று 2023ல் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். 38 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சட்ட மன்றத்தில் எம்எல்ஏவாக நுழைந்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிகிச்சை
இந்நிலையில் உடல் நலக்குறைவால் நவம்பர் 11ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும இடைத்தேர்தல்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ் மறைவையொட்டி, சத்தியமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)