தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain : மக்களே எச்சரிக்கை.. இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்.. அடுத்த 5 நாட்கள் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

Rain : மக்களே எச்சரிக்கை.. இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்.. அடுத்த 5 நாட்கள் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

Divya Sekar HT Tamil
May 09, 2024 08:55 AM IST

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்
இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதிகபட்ச வெப்பநிலை :

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது.

அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ் (+5.2° செல்சியஸ் இயல்பை விட அதிகம்) பதிவாகியுள்ளது.

திருச்சியில் (விமான நிலையம்) 42.1°, மதுரையில் (விமான நிலையம்) 41.7° செல்சியஸ், பாளையம்கோட்டையில் 41.5° செல்சியஸ், மதுரையில் (நகரம்) 41.2° செல்சியஸ்), ஈரோட்டில் 40.8° செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 40.1° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23° –31° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 38.6° செல்சியஸ் (+1.0° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1° செல்சியஸ் (-0.3° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.05.2024 மற்றும் 14.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

08.05.2024 முதல் 12.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

08.05.2024 முதல் 12.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40°–41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°–39° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

09.05.2024 முதல் 12.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும்.

09.05.2024 வரை: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலையில் / இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

IPL_Entry_Point

டாபிக்ஸ்