தலைப்பு செய்திகள்: கனமழை எச்சரிக்கை முதல் கூமாபட்டி வரை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: கனமழை எச்சரிக்கை முதல் கூமாபட்டி வரை

தலைப்பு செய்திகள்: கனமழை எச்சரிக்கை முதல் கூமாபட்டி வரை

Kathiravan V HT Tamil
Published Jun 27, 2025 09:19 AM IST

கோவை, நீலகிரியில் கனமழை எச்சரிக்கை, கூமாபட்டி சுற்றுலாதளம் இணையதளத்தில் வைரல், பாஜக மீது முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: கனமழை எச்சரிக்கை முதல் கூமாபட்டி வரை
தலைப்பு செய்திகள்: கனமழை எச்சரிக்கை முதல் கூமாபட்டி வரை

1.கோவை மற்றும் நீலகிரியில் கனமழை எச்சரிக்கை

கோவை மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2.கனமழையால் வீடு இடிந்து இளைஞர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3.கூமாபட்டி - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி கிராமம், சமூக வலைதளங்களில் வைரலான ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் சுற்றுலாத் தலமாக கவனம் பெற்ற போதிலும், அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால், நீர்நிலைகளில் குளிக்க வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

4.முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டு மக்களை மதம் மற்றும் சாதி அடிப்படையில் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கடவுள் பெயரை பாஜக தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

5.அதிமுக பிரமுகர் கொலை - அமைச்சர் விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் ஆதிமுக பிரமுகர் முத்து பாலகிருஷ்ணன் கொலைக்கு நிலத்தகராறே காரணம் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

6.திருவள்ளூரில் காவலரின் துணிச்சல்

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை கைது செய்யச் சென்றபோது, காவலர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து காரில் தொங்கியபடி சென்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

7.உளுந்தூர்பேட்டையில் பத்திர பதிவு முறைகேடு

உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில், பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளரை பூட்டி வைத்து பத்திர பதிவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, அதிமுக நிர்வாகி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8.திருத்தணி அருகே கிரேன் ஆப்பரேட்டர் கடத்தல்

திருத்தணி அருகே இரண்டு கிராம இளைஞர்களுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக, கிரேன் ஆப்பரேட்டரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வெட்டிய துணிச்சல் சம்பவம் நடந்துள்ளது. இதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டு பதற்றம் ஏற்பட்டது.

9.பெண் காவலரை ஏமாற்றியவர் கைது

சென்னை தாம்பரத்தில், ஆயுதப்படை பெண் காவலரை திருமணம் செய்வதாகக் கூறி அத்துமீறிய ஆயுதப்படை கபடி பயிற்சியாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10.தூத்துக்குடியில் பயங்கர விபத்து

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே, முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதிய பயங்கர விபத்தில், காரில் பயணித்த உடன்குடி காங்கிரஸ் பெண் கவுன்சிலர் உயிரிழந்தார்.