TVK Vijay: ‘அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’: பிறந்தநாள் வாழ்த்துக் கூறியவர்களுக்கு தனது ஸ்டைலில் நன்றி சொன்ன விஜய்!
TVK Vijay: ‘அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’ என்று, பிறந்தநாள் வாழ்த்துக் கூறியவர்களுக்கு தனது ஸ்டைலில் நன்றி சொல்லி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை வைரல் ஆகியுள்ளது.

TVK Vijay: நடிகர் விஜய் கடந்த ஜூன் 22ஆம் தேதி தனது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப்பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் நன்றி தெரிவித்து, நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘’ எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில மாண்புமிகு முதலமைச்சர் திரு. என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு. ஓ. பன்னீர்செல்வம், தெலங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய திருமதி தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. கமல்ஹாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் மதிப்பிற்குரிய திரு. ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு. நெல்லை முபாரக், சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய திரு. கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர், மதிப்பிற்குரிய திரு. கே. அண்ணாமலை,
முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. எஸ். திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. டி. ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திருமதி வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திருமதி. தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும்
என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்’’ எனப் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த நடிகர் விஜய்:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப் பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டுவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தனது அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்திருந்தார். இதன் மூலம் விஜய்யின் குறிக்கோள் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள். மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.
தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய்யும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்