தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Hbd Jayalaitha: 'I Am Je Jayalalitha..' Today Is The Birthday Of The Personality Of Tamil Nadu!

HBD Jayalaitha: 'ஜெ ஜெயலலிதா எனும் நான்..' தமிழகத்தின் ஆளுமை பிறந்த தினம் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 24, 2024 05:30 AM IST

அதிமுக வரலாற்றில் ஜெயலலிதாவை பிரித்து வைத்து பார்க்கவே முடியாது என்பதுதான் உண்மை

ஜெயலலிதா பிறந்த நாள்
ஜெயலலிதா பிறந்த நாள்

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு

ஜெயலலிதா மைசூர் சமஸ்தானம் மாண்டியாமாவட்டத்தில் பாண்டவ புரா தாலுகாவில் மேல்கோட்டைஊரில் வாழ்ந்த ஜெயராம் வேதவல்லி இணையரின் மகளாக 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் ஆண்டு பிறந்தார். இவரது இயர்பெயர் கோமளவல்லி. ஜெயலலிதா இரண்டு வயதாக இருந்த போது அவரது தந்தை ஜெயராமன் இயற்கை எய்தினார். இதைத்தொடர்ந்து அவரது தாய் வேதவல்லி தன் பெயரை சந்தியா என்று மாற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

கல்வி

பெங்களூரில் இருந்த போது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார். சென்னைக்கு வந்த ஜெயலலிதா 1958 முதல் 1964 வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்டில் படித்து மெட்ரிக் தேறினார். பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் படிப்பை கைவிடும் சூழல் ஏற்பட்டது. டேபிள் டென்னிஸ் இவருக்கு பிடித்த விளையாட்டாக இருந்தது. மேலும சிறுவயது முதலே இசை, நடனம் பயில தொடங்கினார்.

திரையில் ஜெயலலிதா

முதல் முதலில் 1965ல் வெண்ணிறஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான ஜெயலலிதா 127 படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

இவரது நடிப்பை பாராட்டி மக்கள் கலைச்செல்வி என்று அழைத்தனர். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது உலக தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது காவிரி தந்த கலைச்செல்வி என்ற நாட்டிய நாடகத்தை நடத்தினார். அதுவே ஜெயலலிதாவின் அரசியலுக்கு அச்சாரம் இட்டது எனலாம்.

அரசியலில் ஜெயலலிதா

1982 ஜுன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில் அ. இ. அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். 1984ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். ஜெயலலிதாவின் ஆங்கில உரை பல தலைவர்களை ஈர்த்தது.

எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக ஜானகி ராமச்சந்திரன் அணி ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தது. 1988ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் இரு அணியினரிடையே மோதல் ஏற்பட்டது. 1989ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களை கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜானகி அரசியலிலிருந்து விலகினார். 

ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார். 1991ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் வழக்குகள் இருந்த போதும் 2001ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். பின் உச்சநீதிமன்றம் கண்டித்ததால் 4 மாதத்தில் பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கிலிருந்து நீக்கப்பட்ட பின் 2002ம் ஆண்டு முதல்வராக பதவி ஏற்றார்.

பின்னர் 2011ம் ஆண்டு முதல் 2014 வரை முதல்வராக செயல்பட்டார்.  ஊழல் வழக்கில் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து 2015 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். 

இதையடுத்து 2016ம் ஆண்டும் மீண்டும் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று 19 ஆவது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. ஐ.நாடுகள் சபை அந்த திட்டத்தை வெகுவாக பாராட்டியது. மகளிர் காவல்நிலையம், பெண் கமாண்டோபடைகள் , இலவச சைக்கிள் திட்டம் , அம்மா உணவகம், அம்மா குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல் நலம் மிகவும் மோசமாகி டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பின் அதிமுகவில் உட்கட்சி பூசல் எழுந்தது. ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார். இதையடுத்து நடந்த அரசியல் பிரச்சனைகளில் இன்று அதிமுகவில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மைதான்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது. எளிதில் யாரும் அணுக முடியாதது, லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்தது என அவரை சுற்றிய சர்ச்சைகளும் உண்டு. ஆனால் அதிமுக வரலாற்றில் ஜெயலலிதாவை பிரித்து வைத்து பார்க்கவே முடியாது என்பதுதான் உண்மை

IPL_Entry_Point

டாபிக்ஸ்