Happy valentine's day: காதலர் தின வாழ்த்துகள்! ’காதலா? நட்பா?’ கல்யாண ஜோடிகளுக்கு உதயநிதி சொன்ன டிப்ஸ்!
Happy valentine's day: இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள்; காதலர் தினம். இதை சொன்னால் சில பேருக்கு கோபம் வரும். அவர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என சொல்வார்கள். ஆனால் அதற்காக காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா?, ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான்.

காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என சிலர் சொல்வதால் கொண்டாடாமல் இருக்க முடியுமா என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் 30 இணையர்களுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர் பிரியா மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு:-
தமிழ்நாடு இந்து சமய அறநிலத்துறை சார்பாக 30 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள்; காதலர் தினம். இதை சொன்னால் சில பேருக்கு கோபம் வரும். அவர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என சொல்வார்கள். ஆனால் அதற்காக காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா?, ஒவ்வொரு நாளுமே காதலர் தினம்தான்.
காதலர்களாக இருப்பதை விட நண்பர்களாக இருப்பது முக்கியம்!
அப்படிப்பட்ட முக்கியமான தினத்தில் திருமணத்தை நடத்தி வைக்கின்றோம். ஆகவே உங்கள் அனைவரின் சார்பாக இந்த 30 மணமக்களிடம் நான் கேட்டுக்கொள்வது நல்ல காதலர்களாக இருப்பதை விட நல்ல நண்பர்களாக வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையோடு மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். முந்திய ஆட்சியில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக திருமணங்களை நடத்தி வைக்கின்ற திட்டத்தை நிறுத்தி வைத்து இருந்தார்கள். ஆனால் நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இன்று வரை 1800 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு உள்ளது.
புரட்சி செய்த திராவிட இயக்கம்
இன்றைக்கு நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் பெயருக்கு பின்னால் படிப்பு ஒரு பட்டமாக இருந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு படிக்க விடாமல் செய்த அந்த அழிவில் இருந்து நம்முடைய மக்களை மீட்டெடுத்து மாபெரும் புரட்சியை இந்த மண்ணில் நிகழ்த்திக் காட்டியது தான் நம்முடைய திராவிட இயக்கம். திராவிட மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் இந்திய ஒன்றியம் மட்டுமல்ல, உலகமுமே நம்முடைய தமிழ்நாட்டை பாராட்டிக் கொண்டிருக்கிறது.
அரசின் திட்டங்கள் மூலம் பயன்
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலம் இதுவரை மகளிர் சுமார் 620 கோடி பயணங்களை மேற்கொண்டு உள்ளனர். புதுமைபெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தால் 8 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தால் தினமும் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூல, ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் மேலும் அதிகமானோருக்கு இந்த திட்டம் விரிவு செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வாசித்த ஒன்றிய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற பெயரே இடம்பெறவில்லை.
