Senthil Balaji: செந்தில் பாலாஜி ராஜினாமா! ஓ.கே.சொன்ன ஆளுநர்! ராஜ்பவனில் வந்த தகவல்!
”நாளை மறுதினம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.”
அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
முதலமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதம் பொதுத்துறை வாயிலாக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு சுமார் 230 நாள்களாக சென்னை புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நேற்றைய தினம் ராஜினாமா செய்தார்.
செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 19 முறையாக நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.
செந்தில் பாலாஜியை கைது செய்த பிறகு அமலாக்க துறையினர் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும், பின்னர் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நீதிமன்ற காவல் இதுவரை 19 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக உள்ளவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை மறுத்து வந்தது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதியதாக கட்டி வரும் வீட்டின் மதிப்பு, பரப்பளவு, செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்தும், செந்தில் பாலாஜியின் நண்பர் நடத்தும் உணவகத்திலும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன்பின்னர் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். நாளை மறுதினம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.