Governor Ravi: தென் மாவட்ட மக்களுக்கு ஆளுநர் ரவி வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்!
4 மாவட்டங்களில் மழையால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலமணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை தொடர்கிறது.
வரலாறு காணாத வகையில் பெய்த இந்த பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன. குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிச.18) வெளியிட்டுள்ள பதிவில், "தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும், மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறைகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விரைவில் நிலைமை சீரடைய பிரார்த்தனைகள்" என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்