R.N. Ravi : காவி நிற உடை அணிந்த வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை.. கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்!
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வள்ளுவர் படத்தை பயன்படுத்தாமல் காவி உடையில் இருக்கும் வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படம் ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று திருவள்ளுவர்தினத்தையொட்டி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என் ரவி. காவி நிறத்தில் இருந்த திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வள்ளுவர் படத்தை பயன்படுத்தாமல் காவி உடையில் இருக்கும் வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படம் ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை எக்ஸ் பதிவு
மேலும் திருவள்ளுவர் தினத்தை யொட்டி ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மிகுந்த பக்தியுடனும் நினைவு கூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர் ஒவ்வொரு தனி மனிதனுக்கும், அமைப்புக்கும் பொருந்தும் வகையில் ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார்.
பாரதத்தின் சனாதன நாகரிக மரபில் கடவுள் பக்தியின் உன்னதத்தையும் நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்கு கற்பித்துள்ளார். சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்க குறியீட்டை அவர் வகுத்தார். நாம் இன்று திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் அதே வேளையில், அவர் தினமும் நினைவு கூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான மாண்புமிகு பிரதமர் மோடிக்கு நன்றி. திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்ற பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவி நிற உடை அணிந்த திருவள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தினம், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று (15.01.2025) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார்.
அய்யன் திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது. அவருக்கு காவி உடை அணிந்து, சித்தரிப்பது ஏற்க முடியாது. ஆளுநர் ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.
தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்."இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் காவி உடையில் இருக்கும் திருவள்ளுவர் படத்துடன் பகிர்ந்த எக்ஸ் பதிவு பின்வருமாறு,
எக்காலத்துக்கும், எல்லா நாட்டவர்க்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், திருக்குறளை, உலகம் முழுவதும், பல மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்ததோடு, சிங்கப்பூரில் சர்வதேச திருவள்ளுவர் கலாச்சார மையம், மலேசியா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை உட்பட, உலக நாடுகளில் திருவள்ளுவர் பெருமையைக் கொண்டு சேர்த்திருக்கிறார்.
மனிதக் குலத்தின் வாழ்வியல் முறைகளும், பாரதத்தின் கலாச்சாரமும் ஒருங்கே நிறைந்திருக்கும் திருக்குறளைப் படிப்போம். தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றி வணங்குவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்