Gopalswamy Doraiswamy Naidu: இந்தியாவின் எடிசன் ஜி.டி நாயுடு நினைவு நாள்!
இயக்கவியலை முழுமையாக புரிந்து மக்கள் பயன்பெறும் வகையில் இயந்திரங்களை கண்டு பிடித்த இந்தியாவின் எடிசன். அறிவியல் கண்டு பிடிப்புகளின் முன்னோடி என்றெல்லாம் பாராட்டு பெற்ற ஜி.டி.நாயுடு அவர்களின் நினைவு தினம் இன்று இந்த நாளில் ஜிடி நாயுடுவை நினைவு கூர்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.
கோவை யில் சூலூர் அருகே உள்ள கலங்கல் என்ற கிராமத்தில் உள்ள விவசாயி கோபால்சாமி, அல்லம்மாள் என்ற தம்பதியினருக்கு 1893ல் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு தான் பின்னாளில் தேசமெங்கும் ஜி.டி. நாயுடு என்று அறியப்பட்டவர்.
லட்சுமி நாயக்கன்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் தன்ஆரம்ப கல்வியை நான்காம் வகுப்புடன் முடித்துவிட்டு வந்த போதிலும் இயந்திரவியல் மற்றும் விவசாய புத்தகங்கள் எங்கு கிடைத்தாலும் தேடிப்பிடித்து படிப்பார். இருபது வயது ஆகும் போது ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பிரிட்டிஷ் ஆட்சி செய்த காலம் அது. ஆங்கிலேய அதிகாரி ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வலம் வரும் போது பழக்கம் ஏற்பட்டு அந்த வண்டியை ஓட்டி பழகுகிறார்.
ஒரு கட்டத்தில் பிடித்து போக ஹோட்டல் வருமானத்தில் அந்த வண்டியை வாங்கி விடுகிறார். ஆசையாக வாங்கிய வண்டியை அக்கக்காக கழற்றி ஒவ்வொரு பாகமாக ஆராய ஆரம்பிக்கிறார். மீண்டும் அசெம்பிள் செய்யும் போது இருவர் பயணம் செய்யும் வகையில் பக்கவாட்டில் ஒரு பகுதியை பொருத்தி முழுமையாக மாற்றி அமைக்கிறார். அப்போது ஆரம்பித்த ஆர்வம் தான் எல்லா இடங்களிலும் இயந்திரங்களை வேலைக்காக பயன்படுத்தும் கருவிகள் உருவாக்க உதவியது. பஞ்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து பல விசயங்களை கற்று சொந்தமாக பஞ்சாலை நிறுவினார். கோவையில் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரியுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு வலி நிவாரணி உள்ளிட்ட பல மருந்துகளை அமெரிக்காவில் இருந்து குறைந்த லாபம் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்த வருமானம் ஈட்டினார்.
அவர் முதல்முறையாக பொள்ளாச்சி முதல் பழனி வரை ஒரே ஒரு பஸ்ஸை ஸ்டேன்ஸ் நிறுவனத்திடம் வாங்கி தானே இயக்குகிறார். கூட்டம் கூட்டமாக மக்கள் வர பல வழித்தடத்தில் மோட்டார் எண்ணிக்கையை கூட்டினார். முதன் முதலாக பல்லடத்தில் பல வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்த வரலாறும் உண்டு. இதன் தொடர்ச்சியாக நண்பர்களுடன் சேர்ந்து யுனைடெட் மோட்டார் சர்வீசஸ் என்று உருவாக்கி பேருந்து எண்ணிக்கை அதிகரித்து 650 ஆக்கினார்.
லாபம் தாண்டிய சிந்தனை அவருடையது... ஆகவே பல வெளிநாடுகளுக்கு சென்று தொழில் நுட்பம் கற்பதும் விஞ்ஞான கண்காட்சிகளில் பங்கேற்று ஆராய்ந்து எதையும் மாற்றி அமைத்து பயன்பாடுக்கு கொண்டு வர முயற்சி செய்தார்.
கற்ற விசயங்களை இங்கு இருப்போருக்கு கற்று கொடுக்கும் ஆசானாக மாறி இந்தியாவின் முதல் தொழில் நுட்ப கல்லூரியை ஆரம்பித்து விட்டார்.
தான் உருவாக்கிய புகைப்பட கருவிகள் மூலம் தனக்கு பிடித்தவர்களை படம் பிடிப்பதில் அலாதி பிரியமானவர். அப்படி ஒரு முறை பெரியார் மணியம்மை இருவருடன் அவர் எடுத்த வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலானது. மோட்டார் உற்பத்தி, மோட்டார் சைக்கிள் உற்பத்தி, இருவர் பயணிக்கும் கார் என்று கலக்கியவர். விவசாய துறையில் வாழை, துவரை,சோளம், பப்பாளி, பருத்தி என்று பல தொடர் ஆராய்ச்சி யின் விளைவாக குறைந்த இடத்தில் குறைந்த காலத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் படி செய்தார். பேனா முதல் கார் வரை தயாரித்த சாமானியன். கோவையில் அவர் கண்டுபிடித்த பொருட்களை இன்று ஜிடி நாயுடு மியூசியத்தில் வைத்துள்ளனர். அவரது வரலாற்றை எழுத்தாளர் சிவசங்கரி "அப்பா"- என்ற பெயரில் புத்தகம் ஆக எழுதி இருக்கிறார். அவரது வாழ்க்கை திரைப்படம் ஆக மாதவன் நடிப்பில் உருவாகி வருகிறது.
இயக்கவியலை முழுமையாக புரிந்து மக்கள் பயன்பெறும் வகையில் இயந்திரங்களை கண்டு பிடித்த இந்தியாவின் எடிசன். அறிவியல் கண்டு பிடிப்புகளின் முன்னோடி என்றெல்லாம் பாராட்டு பெற்ற ஜி.டி.நாயுடு அவர்களின் நினைவு தினம் இன்று இந்த நாளில் ஜிடி நாயுடுவை நினைவு கூர்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.
டாபிக்ஸ்