Girl Child Safe: தமிழகத்தில் கவலைக்குள்ளாகும் பெண் குழந்தைகளின் நிலை - க்ரை அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை-girl child safe concerned situation of girl child in tamil nadu cry organization releases shocking report - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Girl Child Safe: தமிழகத்தில் கவலைக்குள்ளாகும் பெண் குழந்தைகளின் நிலை - க்ரை அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

Girl Child Safe: தமிழகத்தில் கவலைக்குள்ளாகும் பெண் குழந்தைகளின் நிலை - க்ரை அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 19, 2024 08:18 PM IST

பொது மக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்கேற்பை மையப்படுத்தி, வருகின்ற ஞாயிற்றுக் கிழமை, சனவரி 21, 2024 அன்று சென்னை, எலியட்ஸ் கடற்கரையில் 'வாக் டு எம்பவர் ஹெர்'-"Walk to EmpowHER!' - எனும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடைபயனத்தை, க்ரை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் கவலைக்குள்ளாகும் பெண் குழந்தைகளின் நிலை
தமிழகத்தில் கவலைக்குள்ளாகும் பெண் குழந்தைகளின் நிலை

நமது நாடு தேசிய பெண் குழந்தைகள் தினத்தை சனவரி, 24 அன்று கொண்டாட தயாராகி வருகிறது. இந்நிலையில், தமிழ் நாட்டில் பெண் குழந்தைகள் நிலை என்னவாக உள்ளது என்று பார்க்கும்பொழுது, அவர்களின் நிலை எதிர்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக இல்லை, மாறக கவலைக்கிடமாக உள்ளது என்பதே நிதர்சன உண்மை.

பெண் குழந்தைகளின் கல்வி: குழந்தைகள் சார்ந்து நமது அரசு வெளியிட்டுள்ள பல்வகை புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்து ஒரு நிகழ்நிலை அறிக்கையை க்ரை-குழந்தை உரிமைகளும் நீங்களும் அமைப்பு வெளியிடுகிறது. அந்த அறிக்கையில், கல்வி சார்ந்த புள்ளிவிவரங்கள் பெண்குழந்தைகள் ஆரம்ப பள்ளியில் சிறந்த எண்ணிக்கையில் சேர்ந்தாலும், உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வரும் பொழுது பெரிய அளவில் எண்ணிக்கை குறைகின்றது.

2021-22 கல்வி ஆண்டிற்கான கல்விக்கான ஒருங்க்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை வெளியிடும் புள்ளி விவரம் தெரிவிப்பது என்னவெனில், ஆரம்ப பள்ளியில் 99 சதவீத பெண் குழந்தைகள் சேர்ந்துவிடுகின்றனர். ஆனால் அதுவே, உயர்நிலைப் பள்ளியில் 57 சதவீதமாகவும்; மேல்நிலைப் பள்ளியில் 50 சதவீதமாகவும் குறைந்து காணப்படுகின்றது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு: பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்து நமக்கு கிடைக்கும் தரவுகளும் நாம் அவர்கள்மீது கொண்டுள்ள அக்கரையின் குறைபாட்டையே வெளிப்படுத்துகிறது. பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும் (Rape) மற்றும் இதர பாலியல் குற்றங்களும் (Sexual Offences) தொடர் செய்திகாளாகவே உள்ளன. 2022-ஆம் ஆண்டிற்கான தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கை (National Crime Records Bureau-NCRB)-தரவுகளின்படி; தமிழ் நாட்டில், 33 பெண் குழந்தைகள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். 3,600-க்கும் மேற்பட்ட பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் (Rape), மேலும் 1000 மேற்பட்ட சிறுமியர் போக்சோ (POCSO) சட்ட வரையறைக்குட்பட்ட பாலியல்ரீதியான தாக்குதலுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர் என அதிர்ச்சிக்குரிய வகையில் தரவுகள் உள்ளன.

பெண் குழந்தைகளின் நலம் மற்றும் ஊட்டச்சத்து: தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (2019-21)-அறிக்கையின்படி, 52 சதவீதத்திற்கும் மேற்பட்ட 15-19 வயதிற்குட்பட்ட வளரிளம் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே அறிக்கையில், 12.8 சதவீத 20-24 வயதுக்குட்பட்ட பெண்கள் தங்களுக்கு 18 வயதிற்கு முன்பே திருமணம் நடத்தப்பட்டதாகவும், அதனால் குடும்பம் மற்றும் தாய்மை சார்ந்த பொறுப்புகளை சமாளிப்பதில் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் மிகவும் சிரமப்படுவதை வெளிப்படுத்தியுள்ளனர். ஆக, பெண் குழந்தைகளின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்து நமக்கு கிடைக்கும் தரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

க்ரை - வெளியிட்டுள்ள நிகழ்நிலை அறிக்கையானது நமது நடுவண்அரசு; ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை (UDISE+)-2021-22, தேசியக் குற்ற ஆவணக் காப்பக

அறிக்கை -2022 (National Crime Records Bureau-NCRB) மற்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு -5 (2019-21) ஆகிய மூன்று ஆவணங்களின் புள்ளி விவரங்களை ஆதாரமாகக்கொண்டது. இந்த நிகழ்நிலை அறிக்கை மூன்று முக்கிய தரவுகளை ஆய்வு செய்கின்றது, அவை பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, நலம் மற்றும் ஊட்டச்சத்து என அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் அடிப்படை காரணிகளாகும்.

க்ரை அமைப்பின் தென் மண்டல இயக்குநர், ஜான் ராபர்ட்ஸ் அவர்கள் இந்த நிகழ்நிலை அறிக்கையை சார்ந்து கூறும்போது, "அரசமைப்புகள் தொடர்ச்சியாக பெண்குழந்தைகளின் நலனை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, நிலமை, எதிர்பார்ப்புக்கு குறைவாகவேவுள்ளது, அது ஒருங்கிணைந்த, தீவிர செயல்பாட்டை நோக்கி நம் அனைவரையும் அழைக்கின்றது."

"பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்தவும்; உயர் கல்வியில் அவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தவும்; குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கான ஊட்டச்சத்து வழங்களை மேம்படுத்தவும்; அரசு, தன்னார்வ அமைபுகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வெண்டியுள்ளது", என அவர் வலியுறுத்துகிறார்.

மேலும் அனைவரும் இணைந்து செயல்படுதல் பற்றி ஜான் ராபர்ட்ஸ் அவர்கள் கூறுகையில், "இதில் அரசுக்கு முக்கிய பங்கும், பொறுப்பும் உள்ளது, அதாவது, பெண் குழந்தைகள் மேம்பாடு சார்ந்த கொள்கை வரைவுகளை கொணர்வதிலும், திட்டங்களுக்கான போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்குவதிலும் மற்றும் அத்திட்டங்களையும் கொள்கைகளையும் கவணத்துடன் நிறைவேற்றுவதிலும் அரசுக்கே முக்கிய பங்குள்ளது".

"தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மக்கள் தலைவர்கள் மற்றும் தனி நபர்கள் திட்டமிட்ட செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலமும் பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்தலாம். பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை தடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது வளமான சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும்." என நம்பிக்கையுடன் அவர் அறிக்கையிடுகின்றார்.

பொது மக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்கேற்பை மையப்படுத்தி, வருகின்ற ஞாயிற்றுக் கிழமை, சனவரி 21, 2024 அன்று சென்னை, எலியட்ஸ் கடற்கரையில் 'வாக் டு எம்பவர் ஹெர்'-"Walk to EmpowHER!' - எனும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடைபயனத்தை, க்ரை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வானது சென்னை, பெங்களூரு, விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களின் தலைநகரங்களிலும் நடைபெறுகின்றது.

'வாக் டு எம்பவர் ஹெர்'-"Walk to EmpowHER!' - இந்த முக்கிய நிகழ்வைப்பற்றி ஜான் ராபர்ட்ஸ் கூறுகையில்," "இது வெறும் நடைபயணம் மட்டுமல்ல, மாறாக, மாறாக, இந்திய பெண் குழந்தைகளுக்கு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை ஏற்படுத்துவற்கான மிகப்பெரிய ஆற்றல்மிக்க முன்முயற்சியாகும். இந்த நடைபயனத்தின் மூலம், பொது மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பெண் குழந்தைகளுக்கு ஒளிமயமான, பாதுகாப்பான எதிர்காலத்தை

உருவாக்கும் ஆற்றல்மிக்க செயல்பாடாகும்", என நம்ம்பிக்கையுடன் தெரிவித்தார்.

"எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச்செல்லும் நமக்கு, தமிழ் நாட்டின் பெண் குழந்தைகள் உரிமை சார்ந்து க்ரை அமைப்பு என்றும் மாறாத அர்ப்பணிப்புடன் செயல்படும். தரமான

கல்வி, நலம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த தளங்களில் உள்ள இடைவெளியினை சரிநிகர் செய்ய நாங்கள் முற்படுவோம். பெண் கல்வியினை மேம்படுத்தவும், குழந்தை திருமண முறையை தடுத்து நிறுத்தவும், குழந்தை தொழில் முறையை தடை செய்யவும்; க்ரை, பன்முனை செயல்திட்டங்களை எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுக்கும். பொது மக்களுடனும் அரசு அமைப்புகளுடனும் இணைந்து செயல்படுவதின்மூலம், எதிர் காலத்தில் ஒவ்வொரு பெண் குழந்தையும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், இலட்சியங்களை அடையவும் நாங்கள் உறுதியுடன் செயல்படுவோம்", என ஜான் ராபர்ட்ஸ் அவர்கள் நம்பிக்கையுடன் தனது அறிக்கையை நிறைவு செய்கிறார்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.