Tamil News  /  Tamilnadu  /  G20 Summit, Chennai Police Banned Flying Of Drone In Some Places
ட்ரோன் - கோப்புபடம்
ட்ரோன் - கோப்புபடம்

Ban on drones: சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை- எதற்கு தெரியுமா?

30 January 2023, 21:48 ISTKarthikeyan S
30 January 2023, 21:48 IST

Ban On Flying of Drones in Chennai: சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று சென்னைப் பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

ஜி-20 மாநாட்டின் நிகழ்வுகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் தலை நகரங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜி-20 மாநாடு வரும் 31 மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் மற்றும் கன்னிமரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐ.டி.சி. சோழா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

மாநாட்டில் அா்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 20 நாடுகளைச் சோ்ந்த 100 விருந்தினா்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனா். மாநாட்டுக்கு வரும் விருந்தினா்கள் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை மாலை 3 மணி முதல் 6 மணி வரை பாா்வையிட சுற்றுலாத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் நாளை முதல் பிப்.2 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், "முதல் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் 31.01.2023 முதல் 02.02.2023 வரை சென்னை மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்த ஜி20 மாநாட்டில் 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப் ஹவுஸ் ஆகிய இடங்களில் தங்கியும் ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் (IIT Research Park) நடைபெறும் கருத்தரங்கத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும் 01.02.2023 அன்று மேற்படி பிரதிநதிகள் அனைவரும் மகாபலிபுரத்தில் உள்ள UNESCO World Heritage Sites-ல் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

எனவே, 31.01.2023 முதல் 02.02.2023 வரையில் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கூறிய தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிகப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் 31.01.2023 முதல் 02.02.2023 வரையில் டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்