‘வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழினமுமாய் இருக்க வேண்டும்’ ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
நீங்கள், சிறியதாக பிசினஸ் செய்து கொண்டிருந்தாலும், உங்கள் தொழிலைத் தமிழ்நாட்டிலும் தொடங்க முயற்சி செய்யவேண்டும். பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில், தமிழ்நாட்டில் நிறைந்துள்ள வாய்ப்புகளை எடுத்துச் சொல்லி, இன்வெஸ்ட் செய்ய மோட்டிவேட் செய்யுங்கள்.

ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் (Cologne) நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு என்கிற ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை இதோஊ
‘‘அப்படியே உங்கள் முகத்தை எல்லாம் தொடர்ந்து அமைதியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இப்படி தான் ஒரு முறை எங்களை எல்லாம் ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்றத் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுகின்றபோது சொன்னார். அதிலும் குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்றபோது இதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். இரண்டு நிமிடம் பேசாமல் இருந்திருக்கிறார். எல்லோருக்கும் கொஞ்சம் வியப்பாக இருந்திருக்கிறது. உடம்பு ஏதாவது சரியில்லையா? தொண்டை ஏதும் சரியில்லாமல் இருக்கிறதா? அதற்குப் பிறகு பேச ஆரம்பித்திருக்கிறார். அந்த உணர்வு தான் எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.
பல்லாயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து, வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கின்றபோது ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சிதான், உண்மையான தமிழ்ப் பாசம்! தமிழினப் பாசம் இது! உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், தமிழன் இருப்பான். தமிழ்க் குரலைக் கேட்கலாம் என்று சொல்கின்ற அளவுக்கு உலகெல்லாம் பரவி, தங்களுடைய அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கின்ற இனம்தான், நம்முடைய தமிழினம்! நம்முடைய இனத்திற்கான இதுதான் மிகப் பெரிய பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

