ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல் விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி வரை.. 2024-ல் நம்மை விட்டு பிரிந்த அரசியல் பிரபலங்கள்!
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா வரை 2024-ல் நம்மை விட்டு பிரிந்த அரசியல் பிரபலங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா வரை 2024-ல் நம்மை விட்டு பிரிந்த அரசியல் பிரபலங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்!
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக் குறைவால் டிசம்பர் 14ஆம் தேதி காலமானார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்!
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் டிசம்பர் 10 ஆம் தேதி காலமானார். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடகா முதல்வராகவும், மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது 2023-ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது.
திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்!
உடல்நலக் குறைவு காரணமாக திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் கோவையில் காலமானார். உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 10 ஆம் தேதி இரா.மோகன் காலமானார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் காலமானார்!
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் வயது முதிர்வால் டிசம்பர் 8 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 94. எம்.டி.ஆர். ராமச்சந்திரன், 1969-ல் நெட்டபாக்கத்தில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து 1969-74 காலம் வரை திமுக-கம்யூ ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செப்டம்பர் 12 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 72. சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்!
திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 18ஆம் தேதி காலமானார்.
முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி காலமானார்!
தமிழக முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி வயது முதிர்வு காரணமாக சென்னையில் நவம்பர் 7 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 87. தமிழக அரசின் உள்துறை செயலராக இருந்தவர் கே.மலைச்சாமி.
முரசொலி செல்வம் காலமானார்!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும் எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமானவர் முரசொலி செல்வம். இவர் கருணாநிதியின் உடன்பிறந்த சகோதரியான சண்முக சுந்தரம்மாள் மகன். இவர் கருணாநிதியின் மகள் செல்வியை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் லேசாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதி மாரடைப்பால் அவர் காலமானார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்!
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல் நலக்குறைவால் செப்டம்பர் 10ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 76.
மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்!
மூத்த இடதுசாரி தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சுவாசக் கோளாறு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 80.
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ நீல கங்காதரன் காலமானார்!
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ நீல கங்காதரன் உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 12 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 80.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்!
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே நட்வர் சிங் ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலமானார். 2004 - 2005 ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார் நட்வர் சிங். பாகிஸ்தானுக்கான இந்திய தூதராகவும் 1966 -1971ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுபைர் கான் காலமானார்!
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரின் ராம்கர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுபைர் கான் அல்வாரில் செப்டம்பர் 14 ஆம் தேதி காலமானார்.
பாஜக எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்!
தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏஎன்ற பெருமைபெற்ற வேலாயுதன் மாரடைப்பால் மே 9 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 73. இவர் தனது 13-வது வயதில் 1963-ம்ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார். கடந்த 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து, இந்து முன்னணி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 1996 சட்டப்பேரவை தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் காலமானார்!
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா. சம்பந்தன் ஜூலை 1 ஆம் தேதி காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91.
முன்னாள் எம்.எல்.ஏ மலரவன் காலமானார்!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான மலரவன் மே 17ஆம் தேதி காலமானார். கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தா.மலரவன். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். கோவை மாநகராட்சி மேயராக 2006ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் காலமானார்!
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நிலை பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 9ஆம் தேதி காலை காலமானார்.
முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி காலமானார்!
தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி ஏப்ரல் 16 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 74.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் காலமானார்!
வந்தவாசி அடுத்த பெரணமல்லூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.எஸ்.அன்பழகன் ஏப்ரல் 8ஆம் தேதி காலமானார். உடல்நலக் குறைவால் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் எம்.ஜி.ஆர்.கழக இணை செயலாளருமான ஏ.கே.எஸ்.அன்பழகன் காலமானார்.
விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி காலமானார்!
விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான ந.புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6 ஆம் தேதி உயிரிழந்தார்.
ஆலங்குடி முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் காலமானார்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் பிப்ரவரி 1ஆம் தேதி காலமானார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.ராஜசேகரன்(81). இவர், ஆலங்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (2006-2011) போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், அந்தக்கட்சியில் இருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2013-ல்இணைந்தார். அக்கட்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.