Top 10 News: அதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் திருச்செந்தூருக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு வரை.. முக்கிய செய்திகள்
Top 10 News: அதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் திருச்செந்தூருக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு வரை.. முக்கிய செய்திகள் குறித்துப் பார்ப்போம்.
மழையின் காரணமாக திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரை டாப் 10 தமிழ்நாடு செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் டங்க்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனால், சுமார் 10 ஆயிரம் பேருக்கு உணவுசமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்திய அளவில் 2024ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் அதிகம் பேர் உயிரிழந்தவர்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது. குறிப்பாக, இம்மாநிலத்தில் 23 ஆயிரத்து 652 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 18ஆயிரத்து 437 பேர் உயிரிழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு தகவல் அளித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல் மாலை தகனம்:
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் தகனம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனமழை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு இன்றும் நாளையும் வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இதனை அறிவுறுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் இருவர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. நாளை மறுநாள் நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து தமிழ்நாடு மேற்கு - வடமேற்கில் நகரும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பொருள்கள் தொடர்பான மோசடியில், மூன்று சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் எட்டு வியாபாரிகள் என மொத்தம் 11 நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட மூன்று சிறைச்சாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மத்திய சிறைகளில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தடை:
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் மூன்றாவது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க, வனத்துறை தடை விதித்துள்ளது. ஏனெனில், கும்பக்கரை அருவியில் நீரின் போக்கு அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல், தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க 4வது நாளாக தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் தொடர்ச்சியாக மழைபெய்துகொண்டு இருப்பதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 65 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல், 1117 ஹெக்டேர் நெற்பயிர்களும், 210 ஹெக்டேர் தானிய வகை பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன.
ஈரோட்டில் விரட்டிக்கடித்த தெருநாயால், சிறுமி உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
டாபிக்ஸ்