‘மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்.. 4 பேர் பலி.. 30 பேர் காயம்’ ராணிப்பேட்டை அருகே பயங்கரம்!
மேலும் விபத்தில் சிக்கிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்து நடந்த இடத்தில் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை அருகே பக்தர்களை ஏற்றி வந்த கர்நாடக மாநில அரசு பேருந்தும், ஈச்சர் லாரி மற்றும் டிப்பர் லாரி ஆகிய மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தவர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முன்பாகல் பகுதியை சேர்ந்தவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலையிட்டு, நான்கு கர்நாடகா மாநில அரசு பேருந்துகளில் சாமி தரிசன செய்ய சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்து வீடு திரும்பும் போது ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, முன்னாள் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை அடுத்தடுத்து பேருந்துகள் முந்தி செல்லும்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்த ஈச்சர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் சிக்கிய பேருந்து, டிப்பர் லாரி மீதும் மோதியதால் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
4 பேர் பலி.. 30 பேர் காயம்
இந்த கோர விபத்தில் நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுக்கி உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீசார், ராணிப்பேட்டை, சிப்காட் தீயணைப்புத் துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுக்லா விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . விசாரணையில் முன்னாள் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை பின்னால் வந்த கர்நாடக அரசு பேருந்து முந்தி செல்ல முயன்றதால் எதிரே காய்கறிகளை ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது மோதி விபத்து நடைபெற்றது என்பது தெரிய வந்தது.
16 டன் காய்கறிகள்.. அள்ளிச் சென்ற மக்கள்
மேலும் விபத்தில் சிக்கிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்து நடந்த இடத்தில் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், விபத்தில் சிக்கிய காய்கறி வாகனத்தில் இருந்து சாலையோரம் கொட்டிக் கிடந்த காலிபிளவர், பீட்ரூட், பீன்ஸ், கொத்தமல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட சுமார் 16 டன் காய்கறிகளை பொதுமக்கள் மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர். போக்குவரத்தை சரி செய்ய ஏற்கனவே காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி வைத்த நிலையில், தற்போது பொதுமக்கள் காய்கறி அள்ளிச் செல்வதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து கலெக்டர் அளித்த விளக்கம்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஆட்சியர் சந்திரகலா பேசுகையில், ‘‘விபத்து நடைபெற்ற இடத்தில் முறையாக வேகத்தடை மற்றும் மின்விளக்குகள் முழுவதுமாக அமைக்கப்படும். அதேபோல் இது போன்ற மேல்மருவத்தூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் வரும் பக்தர்களுக்கு மாநில எல்லையில் மாவட்ட காவல்துறை சார்பில் விபத்துக்களை தடுக்க போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’’ என்று ஆட்சியர் தெரிவித்தார்.