IT Raids: திமுகவினர் தாக்கியதாக 4 ஐடி அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி - கரூரில் நடந்தது என்ன?
Karur IT Raids: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனைக்கு சென்ற போது திமுகவினர் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்சாரத் துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கரூரில் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடைபெற்றபோது வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வருமான வரித்துறை அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பெண் அதிகாரி ஒருவரை திமுகவினர் தாக்க முற்பட்டதாகவும் அதை தடுக்க அவர் முயற்சி மேற்கொண்டபோது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென வருமான வரித்துறை ஆய்வாளர்கள் 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வருமானவரித்துறை அதிகாரிகள் திமுக தொண்டர் ஒருவரை தாக்கியதாக அவர்கள் தரப்பும் குற்றம்சாட்டி வருகிறது. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், "எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடைபெறவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. அதைப்பற்றி நான் இப்போது பேசுவது சரியாக இருக்காது. வருமான வரிச்சோதனை தொடர்பாக எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனக்கு நேரடியாக தொடர்புடையை எந்த இடத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை. சோதனை நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறேன்." என்று தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.