தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Forward Bloc Party P. V. Kathiravan Meet Eps

ADMK Alliance: திமுகவுக்கு டாட்டா.. அதிமுக கூட்டணியில் இணைந்தது பார்வர்டு பிளாக் கட்சி!

Karthikeyan S HT Tamil
Mar 06, 2024 11:06 AM IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

பி.வி.கதிரவன், எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.
பி.வி.கதிரவன், எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதேபோல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கிடையில், பாஜக மற்றும் தமாகா இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி இன்று இணைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கதிரவன் இன்று (மார்ச் 06) சந்தித்து பேசியுள்ளார். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சியும் முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியை பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. .

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து பார்வர்டு பிளாக் கட்சி தேர்தலை சந்தித்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னையில் சந்தித்து முதற்கட்ட பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளார் பி.வி.கதிரவன் .

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்