Tamil News  /  Tamilnadu  /  Former Union Minister Mk Alagiri's Birthday Posters Goes Viral
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி - அமைச்சர் உதயநிதி சந்திப்பு (கோப்புபடம்)
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி - அமைச்சர் உதயநிதி சந்திப்பு (கோப்புபடம்)

திமுகவில் மீண்டும் மு.க.அழகிரியா? மதுரையில் பரபரப்பை கிளப்பிய ஆதரவாளர்கள்!

30 January 2023, 19:52 ISTKarthikeyan S
30 January 2023, 19:52 IST

சமீபத்தில் மதுரைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியைச் சந்தித்த நிலையில், திமுகவில் மீண்டும் அவர் இணைந்து செயல்படுவதை வலியுறுத்தும் வகையிலான போஸ்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன், திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர், முன்னாள் மத்திய அமைச்சர், தன்னுடைய ஆதரவாளர்களால் அஞ்சா நெஞ்சன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் மு.க. அழகிரி இன்று (ஜன.30) தன்னுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளுக்காக அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர்களில் படைத்திருக்கிற காவியங்கள் தான் மதுரையின் இன்றைய பேசுபொருள்.

ட்ரெண்டிங் செய்திகள்

தென்மண்டல அமைப்புச் செயலாளராக, மத்திய அமைச்சராக இருந்த காலகட்டங்களில் மு.க.அழகிரி பிறந்தநாள் என்றாலே மதுரையே திருவிழா கோலம் பூண்டிருக்கும். வீதியெங்கும் தோரணங்கள், சுவரெல்லாம் போஸ்டர்கள், திரும்பிய பக்கம் எல்லாம் பிளக்ஸ் போர்டுகள், நலத்திட்ட உதவிகள், சைவ, அசைவ விருந்துகள் என்று மதுரையை திக்குமுக்காட வைப்பார்கள் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள். மதுரை குலுங்க குலுங்க நடத்தப்பட்ட மு.க.அழகிரியின் பிறந்தநாள் விழா, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு சமீபகாலமாக கொஞ்சம் கொஞ்சமாக சுருதி குறைந்துவந்தது.

திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

இந்த நிலையில்தான் திடீர் ட்விஸ்ட்போல சமீபத்தில் மதுரைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியை நேரில் சந்தித்து ஆசி வாங்கிச் சென்றார். 'என் தம்பி மகன்' என்று உச்சி மோர்ந்து அழகிரியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ரொம்ப உற்சாகமாகிவிட்டார்கள். அதன் காரணமாகத்தான் இந்தாண்டு பிறந்தநாளுக்கு விதவிதமான வாசகங்களுடன் ஏகப்பட்ட போஸ்டர்கள் மதுரை, திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மதுரையில் மு.க.அழகிரியை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
மதுரையில் மு.க.அழகிரியை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

அஞ்சா நெஞ்சருக்கு வாழ்த்துக்கள்..'உங்களைப் பின்தொடர்கிற தம்பிகளுக்குத் தெரியும். பொறுமையாக இருந்தாலும் வலுவிழக்காத புயல் நீ என்று.!'. 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான். அண்ணன் உடையான் தடைக்கு அஞ்சான்..’. 'உரிமைகள் ஊமையாவதுமில்லை. சரித்திரங்கள் சாயம் போவதுமில்லை..'.

'அகிம்சா வழியில் அன்பால் வென்ற அண்ணனே... அஞ்சாநெஞ்சரே!!'. ராஜ ராஜ சோழனின் மூத்த மருமகனே என்ற வாசகங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதனால், அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வேண்டும் என்று விரும்பத் தொடங்கி விட்டனர் அவரது ஆதரவாளர்கள்.

டாபிக்ஸ்