பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு: ’கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்!’ இன்பதுரை விளாசல்!
”கனிமொழி, பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தைரியத்தை பாராட்டியதை இன்பத்துரை வரவேற்றார். ஆனால், திமுக ஆட்சியில் திமுக நிர்வாகியால் விருகம்பாக்கத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் கனிமொழி தானாக முன்வந்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்று கோரினார்”

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை போல் விருகம்பாக்கத்தில் பெண் காவலரின் இடுப்பை கிள்ளிய திமுக நிர்வாகிகளுக்கு எதிராகவும் கனிமொழி நேரில் சாட்சியம் அளிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை வலியுறுத்தி உள்ளார்.
பொள்ளாச்சி வழக்கு: அதிமுகவின் உடனடி நடவடிக்கை
பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2019 பிப்ரவரி 12 அன்று நடந்தது. பாதிக்கப்பட்ட பெண், தனது மானத்தை கருதி முதலில் புகார் அளிக்க தயங்கினாலும், பெற்றோரின் வற்புறுத்தலால் பிப்ரவரி 24 அன்று புகார் அளித்தார். அதே நாளில் அதிமுக அரசு FIR பதிவு செய்து மூன்று குற்றவாளிகளை கைது செய்தது. இரண்டு நாட்களில் நான்காவது குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். திமுக, இந்த வழக்கை அதிமுக தாமதப்படுத்தியதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று இன்பத்துரை தெரிவித்தார்.
CBI விசாரணை: அதிமுகவின் முடிவு
வழக்கில் கைப்பற்றப்பட்ட தொலைபேசியில் இருந்த 100 வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன. இவற்றை மீட்கவும், Facebook IP முகவரிகளை பெறவும் CBI-க்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. 2019இல் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் திறன் மேம்படாததால், அதிமுக அரசு இந்த வழக்கை CBI-க்கு மாற்றியது. இதற்கு அரசாணையும் வெளியிடப்பட்டது. இதை திமுக தவறாக சித்தரித்து அதிமுகவை குற்றம்சாட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.