'அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 'ரோட்டில் நடமாட முடியாது' முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் எச்சரிக்கை!
"ஒரு மக்கள் தலைவரை, மக்கள் நேசிக்கிற தலைவரை, மக்கள் வரவேற்கிற தலைவரை அவதூறாகச் சித்தரிக்கும் செய்திகள் எங்களது நெஞ்சைக் கொதிக்க வைக்கிறது, இதயம் சுக்குநூறாக உடைகிறது"

'அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 'ரோட்டில் நடமாட முடியாது' என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான டி.ஆர்.பி. ராஜா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய கார்டூனை வெளியிட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் நடமாட முடியாத அளவிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், எடப்பாடி பழனிசாமி ஒரு எளிய விவசாயி என்றும், தனது உழைப்பால் உயர்ந்து முதலமைச்சராகி, இன்று எதிர்க்கட்சித் தலைவராக, ஆளும் ஸ்டாலின் அரசின் மக்கள் விரோதப் போக்குகளை தைரியமாக சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குவதாகவும் புகழாரம் சூட்டினார். ஈ.பி.எஸ்-ஸின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.