’விஜய் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதால் தவெகவில் இணைந்தேன்!’ முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ் பேட்டி
"சிவில் சர்வீஸுக்கு வந்ததே சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தான். அரசு அதிகாரியாக நிறைய செய்ய முடிந்தாலும், மக்களின் உண்மையான அதிகாரத்தை அரசியல் மூலமே முழுமையாக பயன்படுத்த முடியும்,"

விஜய்க்கு தமிழகத்திற்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட கால கனவு உள்ளதால் தவெகவில் இணைந்ததாக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் வருமான வரித்துறை (ஐஆர்எஸ்) அதிகாரியான அருண்ராஜ், தமிழக வெற்றி கழக (த.வெ.க) தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்து, கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அரசு பணியில் இருந்து அரசியலுக்கு மாறியது குறித்து அவர் அளித்த பேட்டியில், மக்களுக்கு பயனுள்ள ஆட்சியை வழங்குவதற்காக த.வெ.கவை தேர்ந்தெடுத்ததாக தெரிவித்தார்.
அரசியலில் இணைந்ததற்கான காரணம்
சிறு வயது முதலே மதச்சார்பற்ற, அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் (secular and inclusive politics) ஆர்வம் இருந்ததாக அருண்ராஜ் கூறினார். "தமிழகத்தில் மாற்றம் தேவை என்ற உணர்வு உள்ளது. த.வெ.க தலைவர் விஜய், தேர்தல் வெற்றியைத் தாண்டி, சமூக மாற்றத்திற்காக உழைப்பதால் இந்தக் கட்சியை தேர்ந்தெடுத்தேன்," என்று அவர் தெரிவித்தார். 70 ஆண்டு பழமையான கட்சிகள் இருந்தாலும், த.வெ.கவின் கொள்கைகளே தமிழகத்திற்கு தேவையானவை என்று அவர் வலியுறுத்தினார்.