’எம்ஜிஆர் உடன் மோடியை ஒப்பீடுவதா? மலைக்கு மடு ஒப்பாகுமா?’ அண்ணாமலையை விளாசும் ஜெயக்குமார்!
’பிரிவினை நாடோம்! சமநிலையில் இணைவோம்’ என எம்ஜிஆர் சொன்னார். இன்றைக்கு இந்த கொள்கையையா பாஜக பின்பற்றுகிறது. மதத்தால் பிரிவினை செய்வதே பாஜகவின் வேலை.
எம்ஜிஆர் உடன் உடன் பிரதமர் நரேந்திரமோடியை ஒப்பீடு செய்து பேசியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், புரட்சித் தலைவர் எம்ஜிஆரை யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாது. சாதி சமய வேறுபாடுகள், மதரீதியிலான அரசியலை எம்ஜிஆர் செய்யவில்லை என்பதை அண்ணாமலை ஒத்துக் கொள்கிறாரா? விவசாயிகள், தொழிலாளிகள், நெசவாளர்கள், மீனவர்கள், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், ஜெயின மக்கள் உள்ளிட்ட எல்லோரும் போற்றக் கூடிய தலைவர் எம்ஜிஆர், அது போல் மோடியை மக்கள் பாராட்டுகிறார்களா?
சமூகநீதி அடிப்படையில் 50 சதவீத இட ஒதுகீட்டை புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான் கொண்டுவந்தார். 69 சதவீத இட ஒதுகீட்டுக்கு பாதிப்பு வந்தபோது அதை பாதுகாத்தது அதிமுகதான். தமிழக மக்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவிக்க திமுக காரணமா? அல்லது மோடி காரணமா?
சாதி, மத பேதங்களை கடந்து சமத்துவம் காணும் இயக்கம்தான் அதிமுக. ’பிரிவினை நாடோம்! சமநிலையில் இணைவோம்’ என எம்ஜிஆர் சொன்னார். இன்றைக்கு இந்த கொள்கையையா பாஜக பின்பற்றுகிறது. மதத்தால் பிரிவினை செய்வதே பாஜகவின் வேலை. ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல் ஒரு கண்ணில் இஸ்லாமியர்கள், ஒரு கண்ணில் மற்றவர்களை பாஜக அரசு வைத்து உள்ளது. எனவே எம்ஜிஆர் உடன் மோடியை ஒப்பிடவே முடியாது. இது மடுவுக்கும், மலைக்கும் உள்ள வித்தியாசம்.