ADMK Vs NTK: ’பெரியாரை அவதூறாக பேசிய சீமானை பிடித்து ஜெயிலில் போட வேண்டும்!’ முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்
"ஆளுங்கட்சி அவரை பிடித்து போட வேண்டும். பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் ஸ்டாலினுக்கு பின்னால் உள்ளது. பெரியார் நினைவிடத்திற்கு சென்று ஸ்டாலின் உறுதி மொழி எடுத்தது நாடகம் என்று தெரிய வருகிறது"

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பிடித்து உள்ளே போடாதது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.
சீமானை கைது செய்ய கோரிக்கை
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், சீமான் குறித்து விமர்சனத்தை ஜெயக்குமார் சொல்லி உள்ளார். நானும் கண்டனம் தெரிவித்து உள்ளேன். இதற்கு மேல் ஆளும் கட்சிதான் அழுத்தம் தந்து இருக்க வேண்டும். ஆளுங்கட்சி அவரை பிடித்து போட வேண்டும். பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் ஸ்டாலினுக்கு பின்னால் உள்ளது. பெரியார் நினைவிடத்திற்கு சென்று ஸ்டாலின் உறுதி மொழி எடுத்தது நாடகம் என்று தெரிய வருகிறது.
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது அதிமுக!
தமிழ் மொழிக்காக அண்ணாவுக்கு பிறகு உலகத் தமிழ் மாநாட்டை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நடத்தினார்கள். நானும் மாநாடு நடத்துகிறேன் என்று சொல்லி செம்மொழி மாநாட்டை கலைஞர் நடத்தினார். தியாகி கீழப்பழூர் சின்னசாமியின் மறைவு செய்தி கேட்டு எம்ஜிஆர் அவர்கள் 5 ஆயிரம் கொடுத்தார். அவருடைய மகள் திராவிட செல்விக்கு திருமணத்திற்காக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனால் கருணாநிதி வெறும் 5ஆயிரம் மட்டுமே கொடுத்தார் என தெரிவித்தார்.
டங்ஸ்டன் விவகாரத்தில் அரசு மீது விமர்சனம்!
இனியாவது டங்ஸ்டன் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்காமல் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், டங்ஸ்டன் வரக்கூடாது என்று முதலில் போராடியதே எடப்பாடியாரால்தான். தன்னுடைய ஆட்சியில் டங்ஸ்டன் தொழிற்சாலை வரக்கூடாது என்று சொல்லி என்ன அழுத்தம் கொடுத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் எங்கே சென்றார்கள்; பூப்பறிக்க சென்று இருந்தார்களா?, டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் விவசாயம் அழியும் என்று எந்த நாடாளுமன்ற உறுப்பினராவது பேசி உள்ளாரா?. சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் எடப்பாடியார் கேட்ட கேள்விக்கு அரசு பதில் தரவில்லை. நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை கனிமவள ஏலம் தொடர்பாக மட்டுமே பேசினார். மக்கள் போராட்டத்தை மத்திய அரசு தெரிந்து கொண்டுவிட்டது. அதிமுக எதிர்த்த பிறகுதான் நாங்களும் எதிர்க்கிறோம் என்று முதலமைச்சர் கூறினார்.
