Virudhunagar: நிலம் ஆக்கிரமிப்பு.. அமைச்சர் வீட்டை நோக்கி ஊர்வலம்.. விருதுநகரில் விவசாயிகள் கைது!
ஏற்கனவே இந்த பிரச்சினை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அவர்களிடம் ஒரு வருடத்திற்கு முன்பு மனுக் கொடுக்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை மனு கொடுக்கப்பட்டது. அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிவகாசி லவ்லி கார்ட்ஸ் என்கிற கார்ப்பரேட் நிறுவனம் வீரச் செல்லையாபுரம் குமாரலிங்க புரம் ஆகிய இரண்டு கண்மாய்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து கால்வாய்களையும் வண்டிப் பாதையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம், புகார் செய்ததாக கூறப்படுகிறது. விருதுநகர் வட்டாட்சியரும் புலத் தணிக்கை செய்து ஆக்கிரமிப்பு உள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்து சம்மன் அனுப்பியும் கார்ப்பரேட் கம்பெனி ஆக்கிரமிப்பை அகற்ற முன் வரவில்லை.
ஆக்கிரமிப்பு அகற்ற உறுதியளித்த நிர்வாகம்
லவ்லி கார்ட்ஸ் கார்ப்பரேட் கம்பெனி, மாவட்ட ஆட்சியரை அணுகி ஆக்கிரமிப்பு இல்லை என்று ஒரு கடிதத்தை ஏதோ ஒரு வகையில் பெற்றுள்ளனர். அதன் பிறகு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முறையிட்டனர். மாவட்ட ஆட்சியர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை நியமித்து புலத் தணிக்கை செய்ய உத்தரவிட்டார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு உள்ளது என்று உறுதி செய்ததாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அவர்களும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றலாம் என்று கூறி இருந்தாராம்.
அதன் பிறகு எந்த விதமான நடவடிக்கையும் மாவட்ட ஆட்சியர் எடுக்கவில்லை. ஏற்கனவே இந்த பிரச்சினை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அவர்களிடம் ஒரு வருடத்திற்கு முன்பு மனுக் கொடுக்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை மனு கொடுக்கப்பட்டது. அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அறிவித்தபடி போராட்டம் முன்னெடுப்பு
ஆக்கிரமிப்பை அகற்ற முடியாத மாவட்ட ஆட்சியர் அவர்களும் வருவாய்த் துறை அமைச்சர் அவர்களும் பதவி விலகக் கோரி இன்று விவசாயிகள் அமைச்சர் வீட்டு முன்பு 12-4-2025 காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்கள்.
அதன் படி, இன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் விருதுநகர் மேம்பாலம் அருகில் இருந்து அமைச்சர் வீட்டை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். காவல்துறை புறப்பட்ட இடத்திலேயே ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் விருதுநகர் உழவர் சந்தை அருகில் லெட்சுமி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.
தலைமை செயலகத்தில் போராட்டம் நடத்த முடிவு
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் சென்னை தலைமைச் செயலகம் சென்று போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளார்கள். தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ ஏ. நாராயண சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன், தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு சங்கம் தலைவர் பி பி ராமமூர்த்தி, முன்னாள் ராணுவத்தினர் சங்கத் தலைவர் கேசவராஜன், இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன், தமிழ் விவசாயிகள் சங்கம் பொருளாளர் கவலூர் சுப்பாராஜ் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டாபிக்ஸ்