செண்பகவல்லி தடுப்பணை: வளம்குன்றி கிடக்கும் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்! ஒன்று திரட்ட விவசாயிகள்!
“செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்யாததால், தென்காசி மாவட்டத்தில் சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் வெம்பக்கோட்டை, சாத்தூர் வட்டாரங்கள், எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டாரங்கள் என சுமார் 40,000 ஏக்கர் சாகுபடி நிலம் வளம் குன்றி கிடக்கிறது”

தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த வைப்பாறு பாசன விவசாயிகள் பங்கேற்ற செண்பகவல்லி தடுப்பணை வைப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது. "செண்பகவல்லி தடுப்பணை எங்கள் உரிமை" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தடுப்பணையைச் சீரமைத்து உரிமையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் முக்கிய நிகழ்வாக, ஜூலை 10 ஆம் தேதி தென்மலை கிராமத்தில் பத்தாயிரம் விவசாயிகள் பங்கேற்கும் செண்பகவல்லி மீட்பு எழுச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவர் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (மே 17, 2025) அன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிவகிரி ரத்தின வேலு தலைமை வகித்தார். தென்மலை பாபு ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த புளியங்குடி பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, தென்மலை ஜமீன்தார் முத்தரசு பாண்டியன், தெற்கு அரண்மனை பூமிநாதன், சிவகிரி வெங்கடேசப் பண்ணையார், கலிங்கப்பட்டி ஒன்றியக் கவுன்சிலர் அருண் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். அர்ச்சுணன் ஆலோசனைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். ராயகிரி பிச்சாண்டி, பனையூர் பத்மநாபன், களஞ்சியம் பெண்கள் அமைப்பு பொன்னுத்தாய், கூடலூர் சிவஞான பாண்டியன், குருசாமி பாண்டியன், வடக்கு சத்திரம் தங்கவேலு, கலிங்கப்பட்டி வழக்கறிஞர் ராகவன், அர்ஜுனா நதி பாசனம் துலுக்க பட்டி ராமமூர்த்தி, வைப்பாறு பாசனம் ராம் பாண்டியன், குண்டாறு, கிருதுமால் பாசனம் கோபாலகிருஷ்ணன், இருக்கன்குடி கணேசன் ஆகியோர் கூட்டத்தில் கருத்துரை வழங்கினர். கூட்டத்துக்கான தீர்மானத்தை துலுக்க பட்டி ராமமூர்த்தி முன்மொழிய, அது அனைவரின் முழு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக தென்மலை காளிமுத்து நன்றி கூறினார்.