தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fact Check: பிரதமர் மோடி தியானம் செய்வது புரி ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கதான் என அண்ணாமலை கூறினாரா?

Fact Check: பிரதமர் மோடி தியானம் செய்வது புரி ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கதான் என அண்ணாமலை கூறினாரா?

Fact Crescendo HT Tamil
May 31, 2024 03:52 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக FACT CRESCENDO செய்தி நிறுவனம் ஆய்வு செய்தது.

Fact Check: பிரதமர் மோடி தியானம் செய்வது புரி ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கதான் என அண்ணாமலை கூறினாரா?
Fact Check: பிரதமர் மோடி தியானம் செய்வது புரி ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கதான் என அண்ணாமலை கூறினாரா? (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சாவியை கண்டுபிடிக்கவே தியானம்! மூன்று நாள் தியானம் முடிந்து பிரதமர் திரும்பி செல்லும் போது ஜெகன்நாதர் கருவூல சாவியுடன்தான் திரும்பி செல்வார் – தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன?

ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் கருவூல சாவி தமிழ்நாட்டுக்குச் சென்று விட்டது என்று சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசியிருந்தார். இந்தச் சூழலில் கன்னியாகுமரியில் மூன்று நாள் தியானம் மேற்கொள்ள மோடி வருகிறார். இந்த இரண்டையும் இணைத்து அண்ணாமலை கூறியது போன்று போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே போலியானது என்று தெளிவாகத் தெரிகிறது. இதையும் பலரும் பகிர்ந்து வரவே, வேறு வழியின்றி ஃபேக்ட் செக் செய்தது Fact Crescendo. முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை தினமலர் வெளியிடவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ள அதன் சமூக ஊடக பக்கங்களை பார்த்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று அண்ணாமலை புகைப்படத்துடன் எந்த நியூஸ் கார்டையும் தினமலர் வெளியிடவில்லை என்பது தெரிந்தது.

ரிவர்ஸ் இமேஜ் தேடல்

மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வடிவமைப்புடன் தற்போது தினமலர் நியூஸ் கார்டுகளை வெளியிடவில்லை என்பதையும் காண முடிந்தது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கடந்த ஜனவரி 10, 2024 அன்று இதே போன்ற நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “தமிழக அமைச்சா;கள் 3 பேர் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ளத் தினமலர் நாளிதழ் ஆசிரியர் குழுவைச் சார்ந்த ஒருவருக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பேக்ட் கிரெசன்டோ ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு: இந்தச் செய்தி போலியானது ஆகும்.

தேர்தல் சமயங்களில் போலியான செய்தி அதிகம் பரவி வருவதால், எதையும் உடனடியாக வாசகர்கள் நம்ப வேண்டாம். எதையும் பரிசீலித்து அதன்பிறகு அதுகுறித்து ஒரு முடிவுக்கு வாங்க.

பொறுப்புத்துறப்பு: இந்தச் செய்தி முதலில் fact crescendo இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்