VC Chandrakumar: ஈரோடு கிழக்கு தேர்தல்! கேப்டனின் தளபதி TO தளபதியின் தம்பி! யார் இந்த விசி.சந்திரகுமார்!
2011ஆம் ஆண்டு அதிமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தற்போதைய திமுக அமைச்சர் சு.முத்துசாமியை வீழ்த்தி முதல்முறை எம்.எல்.ஏ ஆனார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது. வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யார் இந்த வி.சி.சந்திர குமார்!
தமிழ் நெசவாளர் குடும்ப பின்னணியை சேர்ந்த விசி.சந்திரகுமார், முதுநிலை பொதுநிர்வாகம் படித்து முடித்து மொத்த ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அதிமுகவின் வார்டு பிரதிநிதியாக தனது அரசியல் வாழ்கையை தொடங்கிய நிலையில், விஜயகாந்த் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மாவட்ட ரசிகர் மன்றத் தலைவரானார். தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கிய போது, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.
2011ஆம் ஆண்டு அதிமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தற்போதைய திமுக அமைச்சர் சு.முத்துசாமியை வீழ்த்தி முதல்முறை எம்.எல்.ஏ ஆனார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினார். தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் சிலருடன் திமுகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். ‘மக்கள் தேமுதிக’ என்ற தனி அமைப்பை ஏற்படுத்தி, திமுக ஆதரவுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியினார். அத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வி அடைந்தார்.
2021 தேர்தலில் ஈரோடு கிழக்குத்தொகுதி காங்கிரஸ் வசம் சென்றதால் சந்திரக்குமாரால் போட்டியிட முடியாத சூழல் இருந்தது. அண்மையில் விசி சந்திரகுமார் இல்லத் திருமண விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சமூகமாக செங்குந்த முதலியார் சமூகம் உள்ளது. இந்த நிலையில் அரசியல் கணக்குகளை புரட்டிப்பார்த்து வி.சி.சந்திர குமாருக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது.