’விரும்பும் கடவுள்களை வழிபடுவது ஜனநாயக உரிமை’ முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு ஈபிஎஸ் பதில்!
”தற்போதைய ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் மூலம் மக்களை மடைமாற்ற முயல்கின்றனர். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு தக்க பதிலளிப்பார்கள்”

ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் கடவுள்களை வழிபட உரிமை உண்டு என மதுரை முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
கீழடி அகழ்வு ஆய்வு குறித்து விளக்கம்
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கீழடி அகழ்வு ஆய்வு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். “நேற்றைய தினமே, அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. மாஃபா பாண்டியராஜன், கீழடி ஆய்வு குறித்து விரிவாக விளக்கமளித்துவிட்டார். மாண்புமிகு அம்மா ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவரது மறைவுக்குப் பின் அதிமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன,” என்றார். மீண்டும் இதே கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
மதுரை முருகன் மாநாட்டுக்கு வாழ்த்து
மதுரையில் நடைபெறும் முருகன் மாநாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஈபிஎஸ், “ஜனநாயக நாட்டில், ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான கடவுள்களை வழிபடுவது அவர்களின் உரிமை. இந்த அடிப்படையில், மதுரையில் நடைபெறும் மாநாட்டுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்,” என்றார்.