ஏதே தியாகியா? துரோகி தெரியுமா? ’எடப்பாடி பழனிசாமி பாஜகவின் பண்ணை அடிமை!’ விளாசும் ரகுபதி!
”தனக்கு முதுகெலும்பு இருப்பதே, பாஜகவிற்கு வளைந்து கொடுத்து அடிமை சேவகம் செய்வதற்குத்தான் என ஒன்றிய அரசின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பாஜகவின் பண்ணையடிமைதான் பழனிசாமி”

தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான் என சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு ரகுபதி தெரிவித்து உள்ளார்.
தியாகியை விடுங்கள்! துரோகியை தெரியுமா?
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு '’நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகிகள்’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதிலில், நொந்து போன எதிர்க் கட்சித் தலைவர் வீராவேசமாகக் கருத்து சொல்லியிருக்கிறார்.தியாகியை விடுங்கள். துரோகியைத் தெரியுமா? ’தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான். அரசியல் அறத்தை அடகு வைத்து விட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் பழனிசாமி. அம்மையார் ஜெயலலிதா அருகில் கூனி குறுகி நிற்பார்; அம்மையார் ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார்; ஆனால், ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக பாஜகவின் பாதம்தாங்கியாக மாறி ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி. தவழ்ந்து, ஊர்ந்து சென்று நாடகமாடி ஆட்சியைப் பிடித்த பிறகு, சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே!
அதிமுக தொண்டன் ஏமாற்றம்
சுயநலத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்வார்? எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிகள் ஓ.பன்னீர்செல்வமும் தினகரனும். உண்மையில் எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள்தான் அந்தத் தியாகிகள்! கடந்த 2 ஆண்டுகளாக ’’பாஜகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று சத்தியம் செய்து வந்த பழனிசாமி, இன்று டெல்லி மேலிடத்தின் மிரட்டலுக்குப் பயந்து, சிறைக்கு அஞ்சி, தாங்கள் அடித்த கொள்ளை பணத்தைப் பாதுகாக்க மீண்டும் பாஜக கூட்டணிக்குத் தயாராகி விட்டார். அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் பிரமுகர்களை முறை போட்டுப் போய் பார்த்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான்! அவர்களுக்கும் எடப்பாடி துரோகிதான்!