Erode MP Ganesamoorthy: மதிமுக எம்.பி கணேச மூர்த்தி உடல் நிலை கவலைக்கிடம்.. எக்மோ சிகிச்சை நடக்கிறது - துரை வைக்கோ
Erode MP Ganesamoorthy: மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சென்று பார்வையிட்டார்.

Erode MP Ganesamoorthy: மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சென்று பார்வையிட்டார்.
கடந்த ஒரு வார காலமாக மன அழுத்தத்தில் இருந்த நிலையில் வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேச மூர்த்தி வெற்றி பெற்று இருந்தார். ஐந்தாண்டுகள் எம்.பியாக இருந்த கணேச மூர்த்திக்கு இந்த தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை சீட் வழங்கவில்லை.
ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை திடீரென தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டநிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டார். சுயநினைவை அவர் இழந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று மாலை கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை பார்த்து திரும்பினார்.
இது குறித்து துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில்
நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கவலைக்கிடமாக உள்ளார் எனவும் தெரிவித்தார்.
உடல் நிலை சீராக இருந்தாலும் இப்போது எக்மோ சிகிச்சை கொடுத்து வரப்படுகிறது என்றார். 24-48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார்.
இருதய சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது எனவும் பிற உறுப்புகளுக்கான ஆய்வறிக்கைகள் வந்தால் தான் முழுமையாக சொல்ல முடியும் என்றும் கூறினார்.
கணேச மூர்த்தியை சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளதாகவும், வயிற்று சுத்தம் செய்து கொண்டு வரப்பட்டும் , ரத்தத்தில் கலந்துள்ளதால் இருதய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அனைவரும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை என்றார்.
கட்சி மீது வருத்தமா?
திமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த கணேச மூர்த்தி வைகோ தனியாக பிரிந்த போது அவருடன் சென்றார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று எம்பியாக இருந்தார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சீட் தரப்படும் என கணேச மூர்த்தி இருந்த நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து கட்சித் தலைமை முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் அவர் கடந்த ஒரு வாரமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருக்கும் போது மாத்திரகளை சாப்பிட்டு மயக்கம் அடைந்து சுயநினைவை இழந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல:
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்