Erode East By Election: வாக்குக்கு பணம்.. அண்ணா போல் மிமிக்ரி.. தேர்தல் விதிமீறல் - சீமான் மீது வழக்குப்பதிவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East By Election: வாக்குக்கு பணம்.. அண்ணா போல் மிமிக்ரி.. தேர்தல் விதிமீறல் - சீமான் மீது வழக்குப்பதிவு

Erode East By Election: வாக்குக்கு பணம்.. அண்ணா போல் மிமிக்ரி.. தேர்தல் விதிமீறல் - சீமான் மீது வழக்குப்பதிவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 01, 2025 01:04 PM IST

Erode East By Election: வாக்குக்கு பணம் கொடுப்பது பற்றி பேரறிஞர் அண்ணா போல் பேசிய சீமான், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பிரச்சார கூட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 வாக்குக்கு பணம்.. அண்ணா போல் மிமிக்ரி.. தேர்தல் விதிமீறல் - சீமான் மீது வழக்குப்பதிவு
வாக்குக்கு பணம்.. அண்ணா போல் மிமிக்ரி.. தேர்தல் விதிமீறல் - சீமான் மீது வழக்குப்பதிவு

சூடுபிடிக்கும் தேர்தல் களம்

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து திமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அதேபோல் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். இன்னும் சில நாள்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

சீமான் மீது வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி முனிசிபல் சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சார கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் பிரச்சார கூட்டத்துக்காக தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டனராம்.

இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், அவரை பணி செய்ய விடாமல் பிரச்சார கூட்டத்தை தொடர்ந்து நடத்தியுள்ளனர். இதையடுத்து, பறக்கும்படை அதிகாரி, ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி, சாட்டை துரைமுருகன், நவநீதன் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது 189(2), 126(2), 174,132 BNS ஆகிய நான்கு பிரிவுகளில் கீழ் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான் மீது தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக ஐந்து வழக்குகளும், கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா போல் சீமான் மிமிக்ரி

இதையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் சேகரிக்கும் விதமாக பிரச்சார மேடை அமைக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து சீமான் பேசினார். அப்போது அவர் அண்ணா போல் மிமிக்ரி செய்து கட்சியினரை மகிழ்வித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சீமான் பேசியதாவது, "ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் மதிப்புமிக்க உரிமையும், கடைசி வாய்ப்பாக வாக்களிப்பது இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு ரூபாய் என ஓட்டுக்கு காசு கொடுத்தார்கள் என்று கூறுகின்றனர். அதை முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசினார்.

"காங்கிரசார் ஓட்டுக்கு காசு கொடுப்பானேன். அந்த காசை வாங்கிக் கொண்டு என்னிடத்தில் ஒட்டு போட வேண்டும் என்று ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிற வெங்கடாசலபதியை அழைத்துக் கொண்டு அந்த பணத்தில் அடித்து சத்தியம் வாங்குவானேன் இந்த காங்கிரசார்" என்று அண்ணா போல் பேசி மிமிக்ரி செய்தார்.

இப்போது காங்கிரசாருக்கும் சேர்த்து அண்ணாதுரை பெயரை சொல்லி ஓட்டுக்கு ரூ. 5000 கொடுக்கும் வேலையை செய்வதுதான் இந்த திராவிடம்.

ஜனநாயகத்தை அடமானம் வைப்பது அவமதிக்கும் செயல்

தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பானா? என்று அண்ணாதுரை சொல்கிறார்.அந்த மதிப்புமிக்க தங்கத்தை தவிட்டுக்கு வாங்குவது தான் திராவிடம். அம்பேத்கர் அன்றைக்கு மதிப்புமிக்க ஓட்டுகளை சில ரொட்டி துண்டுகளுக்காக விற்பது அவமானம் என்றார். ஓட்டுக்கு காசு கொடுப்பவன் பாவி, அந்த காசை வாங்கி கொண்டு ஓட்டு போடுபவன் தேசத்துரோகி என்று முத்துராமலிங்கத்தேவர் கூறியிருக்கிறார்.

ஜனநாயகத்தை கேடுகெட்ட பணநாயகத்துக்கு அடமானம் வைப்பது என்பது போராடி விடுதலை பெற்று தந்த நமது முன்னோர்களை அவமதிப்பதற்கு சமமாகி விடும்" என்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்திருக்கும் நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி இடையே இருமுனை போட்டி நிலவியுள்ளது.

ஈரோடு கிழக்கு தேர்தலில் மொத்தமாக 58 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதில், 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 7 சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியின் மாற்று வேட்பாளர் என மொத்தம் 8 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் தெரிவித்தார். இதன் பின்னர் சுயேச்சை வேட்பாளர் பத்மாவதி என்பவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.