Erode By Election : களை கட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் தனக்கு மைக் சின்னத்தை ஒதுக்குமாறு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

Erode East By Election : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த பத்தாம் தேதி தொடங்கியது விடுமுறை தினங்களை தவிர்த்து கடந்த பத்தாம் தேதி மற்றும் 13ஆம் தேதி இரண்டு நாட்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்த இரண்டு நாட்களில் ஒன்பது சுயேட்சைகள் ஏற்கனவே வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளது. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் தனக்கு மைக் சின்னத்தை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் வேப்பமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்றும் பல சுயேட்சைகள் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேப்பமனு தாக்கல் இன்று நிறைவடையும் நிலையில் வாக்கு சேகரிப்பு, மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேசமயம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஜனவரி 20 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்து வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியும் இடைத்தேர்தல்களும்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் இருந்து வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவரது திடீர் மறைவை தொடந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் மரணம்
வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இந்த நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். இதை அடுத்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மில்கிபூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கும் அதே தேதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

டாபிக்ஸ்