திருப்புவனம் கஸ்டடி மரணம்.. முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் அராஜகத்தால் நடந்த கொலை.. ஈபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்," திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை!
ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (@India_NHRC) முன்வந்து விசாரிக்க வேண்டும். இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை.