வலுவான கூட்டணி அமையும்!திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.. நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வலுவான கூட்டணி அமையும்!திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.. நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு

வலுவான கூட்டணி அமையும்!திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.. நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 24, 2025 06:30 PM IST

கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம், வலுவான கூட்டணி அமையும். தொடர்ச்சியாக கட்சி பணிகளில் நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வலுவான கூட்டணி அமையும்!திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.. நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு
வலுவான கூட்டணி அமையும்!திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.. நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2026க்கு தயாராகும் வகையில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். அதன் ஒரு பகுதியாக பூத் கமிட்டியை வலுப்படுத்தக்கூடிய பணிகளை அதிமுக தீவிரபடுத்தியுள்ளது .

மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுக்கு உத்தரவு

மாவட்ட வாரியாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை அமைத்து அதற்கான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

மே 15 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி பட்டியலை சமர்ப்பிக்க வலியுறுத்தி இருந்தார் பல்வேறு மாவட்டங்களில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முழுமை பெறாத நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது .

இரண்டு நாள்கள் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் தலா 20 முதல் 21 வரையில் அமைப்பு ரீதியிலான மாவட்டங்களை அழைத்து தேர்தல் பணிகள் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவாதித்து வருகிறார்

அதன்படி இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிவகங்கை, அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களோடு ஆலோசனை நடத்தினார் .

தொடர்ந்து மாலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்துகிறார்.

இன்று காலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கமிட்டி வலுப்படுத்துவது தொடர்பாகவும் , அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

விரைவில் சுற்றுப்பயணம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி, "பூத் கமிட்டியை முழுமையாக நிறைவு செய்து ஜூலை 10ஆம் தேதிக்குள் அதிமுக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பூத் கமிட்டியில் நியமிக்கப்படும் பொறுப்பாளர்களுக்கு கட்டாயம் புகைப்படம் இருக்க வேண்டும். விரைவாக பணிகளை முடித்து தேர்தல் பணிகளை தீவிர படுத்த வேண்டும்" என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்

விரைவில் தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அத்துடன், "கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம், வலுவான கூட்டணி அமையும். தொடர்ச்சியாக கட்சி பணிகளில் நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களிடம் அதை கட்சியின் நிர்வாகிகள் விளக்க வேண்டும். மேலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கும் அதிமுக IT wing பயிற்சி கொடுத்து வாக்காளர்களை கவர வேண்டும். 10 பூத் கமிட்டி நிர்வாகிகளை இணைத்து பயிற்சி கொடுக்க வேண்டும்" என பேசியுள்ளார்.