தொகுதி மறுசீரமைப்பு: ’புலி வருது என பூச்சாண்டி காட்டும் ஸ்டாலின்’ விளாசும் எடப்பாடி பழனிசாமி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தொகுதி மறுசீரமைப்பு: ’புலி வருது என பூச்சாண்டி காட்டும் ஸ்டாலின்’ விளாசும் எடப்பாடி பழனிசாமி!

தொகுதி மறுசீரமைப்பு: ’புலி வருது என பூச்சாண்டி காட்டும் ஸ்டாலின்’ விளாசும் எடப்பாடி பழனிசாமி!

Kathiravan V HT Tamil
Published Jun 06, 2025 11:51 AM IST

”இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை”

தொகுதி மறுசீரமைப்பு: ’புலி வருது என பூச்சாண்டி காட்டும் ஸ்டாலின்’ விளாசும் எடப்பாடி பழனிசாமி!
தொகுதி மறுசீரமைப்பு: ’புலி வருது என பூச்சாண்டி காட்டும் ஸ்டாலின்’ விளாசும் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், ஆதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் ஏற்பட்டால், அதனை எதிர்க்கும் முதல் குரலாக தனது குரல் இருக்கும் என அவர் உறுதியாகக் கூறியுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவர், தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது ஏற்கனவே வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு குறித்து “புலி வருது” என பூச்சாண்டி காட்டுவதாகவும், ஆட்சியின் குறைபாடுகளை மறைக்க இதைப் பயன்படுத்துவதாகவும் எடப்பாடி விமர்சித்தார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே “அடிமை சாசனம்” எழுதிக் கொடுப்பதாகவும், ஆதிமுகவில் அத்தகைய நிலை இல்லை எனவும் அவர் பதிலளித்தார். மேலும், தமிழ்நாட்டு மக்கள் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பு குறித்து தெளிவான மனநிலையில் இருப்பதாகவும், ஆனால் திமுக ஆட்சியில் வாழ்வாதார இழப்பு, வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்றவற்றால் மக்கள் அவதிப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி ட்வீட்

எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், "அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது மு.க.ஸ்டாலினின் இந்த ட்வீட்.

தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்த போதே தெரிவித்தது நான்.

என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்!

கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை!

இன்னும் வராத ஒன்றை "புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை.

உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் #Delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தின் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள்!

திரு. ஸ்டாலின் அவர்களே- மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல் , களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள்!