தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Eps Condemned State Govt Over Illegal Sales Of Liquor In Tamilnadu

EPS: சட்டவிரோத மது விற்பனை; சைலண்ட் மோடில் காவல்துறை - இபிஎஸ் கடும் விமர்சனம்

Karthikeyan S HT Tamil
May 21, 2023 05:54 PM IST

EPS Statement: சட்டவிரோத மது விற்பனை மற்றும் கொலை சம்பவங்களுக்குக் காரணமான ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கத் தவறிய காவலர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழினிசாமி கூறியுள்ளார்.

இபிஎஸ்
இபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் சட்ட விரோத பார்கள் மூலம் போலி மது பானங்கள் விற்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடிகரை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 55) என்பவரை, திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகியோர் அடித்துக் கொலை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் காளம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருவதாகவும், ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள கிராமங்களில் சட்ட விரோதமாகவும், கூடுதல் விலைக்கும் மதுபானங்களை விற்பனை செய்வதாகவும், மூன்று நாட்களுக்கு முன்பு செல்வராஜ் என்பவர் திமுக நிர்வாகியின், சட்ட விரோதமாக மது விற்கும் இடத்தில், ஏன் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து திமுகவின் இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல், கோகுல் மற்றும் உடனிருந்த அடியாட்கள் இடிகரைக்குச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் செல்வராஜை அடித்து இழுத்துச் சென்று காட்டுப் பகுதியில் அடித்துக் கொலை செய்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் இறந்த செல்வராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை முடித்த காவல் துறையினர், உடனடியாக செல்வராஜின் உடலை எரிக்குமாறு அவரது குடும்பத்தினரை வற்புறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவம் நடைபெற்ற கிராமங்களுக்குத் திமுக ரவுடிகள் சென்று அங்குள்ள மக்களிடம் யாரும் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டுவதாகவும், இதனால், அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்புடனும், பதற்றத்துடனும் இருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக, கோவை மாவட்ட திமுக செயலாளர் ரவி என்பவரின் ஆதரவில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோத மது விற்பனை நடந்து வருவதாகவும், ஆனால், கோவை காவல் துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் கூறுவதோடு, ஊடகங்களும் தெரிவிக்கின்றன. காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் செல்வராஜின் கொலை சம்பவம் நடந்திருக்காது. ஏற்கெனவே காவல் துறை, கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனையை முளையிலேயே கிள்ளியிருந்தால், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயத்திற்கு 23 பேர் பலியாகியிருக்க மாட்டார்கள்.

இந்த சட்டவிரோத மது விற்பனை மற்றும் கொலை சம்பவங்களுக்குக் காரணமான ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட அனைவர் மீதும், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவலர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்