'1999-ல் தேர்தல் நடக்கும்போது யாரோடு கூட்டணி வைத்தீர்கள்.. சூடு சொரணை இருந்தால் ஒரு மனிதன் இதைப்பேசக் கூடாது’: ஈபிஎஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  '1999-ல் தேர்தல் நடக்கும்போது யாரோடு கூட்டணி வைத்தீர்கள்.. சூடு சொரணை இருந்தால் ஒரு மனிதன் இதைப்பேசக் கூடாது’: ஈபிஎஸ்

'1999-ல் தேர்தல் நடக்கும்போது யாரோடு கூட்டணி வைத்தீர்கள்.. சூடு சொரணை இருந்தால் ஒரு மனிதன் இதைப்பேசக் கூடாது’: ஈபிஎஸ்

Marimuthu M HT Tamil Published Apr 08, 2025 02:01 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 08, 2025 02:01 PM IST

'1999-ல் தேர்தல் நடக்கும்போது யாரோடு கூட்டணி வைத்தீர்கள் என்றும், சூடு சொரணை இருந்தால் ஒரு மனிதன் இதைப்பேசக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருக்கிறார்.

'1999-ல் தேர்தல் நடக்கும்போது யாரோடு கூட்டணி வைத்தீர்கள்.. சூடு சொரணை இருந்தால் ஒரு மனிதன் இதைப்பேசக் கூடாது’: ஈபிஎஸ்
'1999-ல் தேர்தல் நடக்கும்போது யாரோடு கூட்டணி வைத்தீர்கள்.. சூடு சொரணை இருந்தால் ஒரு மனிதன் இதைப்பேசக் கூடாது’: ஈபிஎஸ்

சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ‘’உண்மையிலேயே இந்த முதலமைச்சருக்கு தில்லு, திராணி தெம்பு இருந்திருந்தால், சட்டமன்றத்தில் எங்களுக்குப் பேச வாய்ப்பளித்து அதற்குண்டான பதிலை சட்டப்பேரவையில் பதிவு செய்தால் அவரை நாங்கள் வரவேற்போம். கோழைத்தனமாக, திட்டமிட்டு அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு, வேண்டுமென்றே எங்கள் மீது கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்கின்றீர்களே! எந்த விதத்தில் நியாயம். இப்படி உரிமையைப் பறிக்கின்றபோது, ஜனநாயக முறைப்படி, அறவழியிலே, இதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். அதைக் கிண்டலும் கேலியுமாகப் பேசுறார்.

திரு.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எதிர்க்கட்சித்தலைவராக இருந்து நான் முதலமைச்சராக இருந்தபோது, எத்தனைமுறை வெளிநடப்பு செய்தீர்கள். அப்போது எல்லாம் கிண்டலும் கேலியும் செய்தோமா.. மதித்தோம்.

ஆளும் வரிசையில் இருப்பவர்கள் எதிர் வரிசைக்குப் போறதுக்கு நிறைய காலம் இல்லைங்க. இன்னும் ஒன்பது மாத காலம் தான் இந்த ஆட்சிக்கு காலமே. 9 மாதத்திற்குப் பின் எதிர்க்கட்சியாக ஆவதற்குக் கூட வாய்ப்பில்லாத சூழல் ஆகப்போகிறது.

‘அகம்பாவத்தில் திரியுறாங்க’: ஈபிஎஸ்!

அகம்பாவத்தில் திரியுறாங்க. இன்றைக்கு வேண்டுமென்ற எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதுதான், இந்த முதலமைச்சரின் வேலையே ஒழிய, மக்களுடைய பிரச்னைகளைப் பேசுவதற்கு எல்லாம் நேரம் கிடையாது.

கருப்பு சட்டை அணிந்துகொண்டு சென்றதை, நல்ல வேளை காவி உடை அணிந்துகொண்டு வரவில்லை என்று ஸ்டாலின் பேசுகிறார். உங்களுக்கு மறதி இருக்குபோல. நீங்கள் பேசலாமா?.1999-ல் தேர்தல் நடக்கும்போது யாரோடு கூட்டணி சேர்ந்துபோட்டியிட்டீங்க. கேவலமாக இல்லை. வெட்கமாக இல்லை. சூடு சொரணை இருந்தால் ஒரு மனிதன் இதைப்பேசக் கூடாது.

தான் என்னசெய்தோம் என்று பார்த்துவிட்டு, அதன்பின் எங்களைக் குறை சொல்ல வேண்டும். அதற்குத் தகுதியில்லாத முதலமைச்சர் இன்றைய முதலமைச்சர். எங்களை வெளியேற்றிவிட்டு நீங்கப் பேசுறீங்க. எங்களுக்குப் பேசுவதற்கு அனுமதி கொடுத்து நீங்கள் பேசியிருந்தால், தக்க பதிலடி கொடுத்திருப்போம்.

வெண்குடை வேந்தன் இன்றைய முதலமைச்சர்: ஈபிஎஸ்

அந்த திராணி உங்களுக்குக் கிடையாது. ஸ்டாலின் அவர்களே, நாட்டின் பிரதமர் வரும்போது கருப்பு பலூன் விட்டீங்க. ஆளுங்கட்சி ஆனபிறகு, அதே பிரதமருக்கு வெண்குடை பிடித்தீர்கள். இன்றைய முதலமைச்சர் வெண்குடை வேந்தன். வெள்ளைக்கொடி பிடித்த வேந்தன். நீங்கள் வீரத்தைப் பற்றி பேசலாமா? யாரிடம் பேசுகிறாய். எங்களைப் பொறுத்தவரை, ஒரு கட்சிக்கு வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம்.

அதுதான் எங்கள் நிலைப்பாடு. உங்களைப்போல, கூட்டணிக் கட்சிகளை அடிமையாக வைத்துக்கொள்ள நாங்கள் இல்லை. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று செயல்படவேண்டும். அப்பதான், அந்தந்தக் கட்சி வளரும்.

‘திமுக கூட்டணிக்கட்சியினர் வளரமாட்டார்கள்’: ஈபிஎஸ்

திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கட்சிகள் எந்தக் காலத்திலும் வளராது. எல்லாமே அடிமைசாசனம் எழுதிக்கொடுத்திட்டாங்க. காலப்போக்கில் இந்தக் கட்சிகள் எல்லாம் காற்றோடு காற்றாக கரைந்துபோய்விடும். உஷாரா இருங்க.

தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பின் ஒரு பேச்சு. இரட்டை வேடம் போடும் கட்சி திமுக.

இந்த கருப்பு சட்டை அணிந்ததின் நோக்கம் சட்டப்பேரவையில் நாங்கள் பேச எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அந்த உரிமையை சட்டப்பேரவைத் தலைவர் பறிக்கின்றார். நாங்கள் பிரதான எதிர்க்கட்சி. மக்களுடைய பிரச்னைகளைப் பேசத்தான் சட்டப்பேரவைக்கு வருகின்றோம். அது எங்களுடைய கடமை. அதற்கு பதில் சொல்வது அரசின் கடமை. ஆனால், இந்த சட்டமன்றத்தில் அந்த நிகழ்வு நடைபெறவில்லை.

எங்களை திட்டமிட்டு வெளியேற்றி, நாங்கள் இல்லாதபோது எங்களை சிறுமைப்படுத்த நினைக்கின்றனர். 2026 சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுக மக்களின் ஆதரவுடன் வெற்றிபெறும்’’ என்று ஈபிஎஸ் பேசியிருக்கிறார்.