Ponmudi: அபாச பேச்சு எதிரொலி! பொன்முடிக்கு எதிராக வளர்மதி, கோகுல இந்திராவை களமிறக்கும் ஈபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ponmudi: அபாச பேச்சு எதிரொலி! பொன்முடிக்கு எதிராக வளர்மதி, கோகுல இந்திராவை களமிறக்கும் ஈபிஎஸ்!

Ponmudi: அபாச பேச்சு எதிரொலி! பொன்முடிக்கு எதிராக வளர்மதி, கோகுல இந்திராவை களமிறக்கும் ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Published Apr 12, 2025 10:54 AM IST

பொன்முடியின் சமீபத்திய பேச்சு, தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்களின் மனங்களில் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த இவரது இத்தகைய கீழ்த்தரமான பேச்சு, தமிழ்நாட்டின் பண்பாட்டையும், அரசியல் நாகரிகத்தையும் அவமதித்துள்ளது.

அபாச பேச்சு எதிரொலி! பொன்முடிக்கு எதிராக வளர்மதி, கோகுல இந்திராவை களமிறக்கும் ஈபிஎஸ்!
அபாச பேச்சு எதிரொலி! பொன்முடிக்கு எதிராக வளர்மதி, கோகுல இந்திராவை களமிறக்கும் ஈபிஎஸ்!

வக்ரத்தின் உச்சம் 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ப் பண்பாட்டில் பெண்களுக்கு அளிக்கப்படும் மாண்பையும், மகத்துவத்தையும் அளவிட முடியாதவை என்பதை உணர்ந்து, பெண்களை அறிவின் உருவாகவும், ஆற்றலின் வடிவமாகவும், தாய்மையின் இலக்கணமாகவும் போற்றி வருகிறது தமிழ் சமூகம். ஆனால், விடியா திமுக அரசின் வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், சைவ மற்றும் வைணவ சமயங்களின் குறியீடுகளை தொடர்புபடுத்தி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். இவரது பேச்சு, மனித மனதில் இருக்கக் கூடாத வக்கிரத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பெண்கள் மனதில் வேதனை 

திமுகவின் வரலாறு முழுவதும் அநாகரிகமான பேச்சுகளும், அரசியல் மேடைகளில் நாகரிகத்தை அழித்து, பெண்களையும், சமயங்களையும், மக்களின் நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தும் செயல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில், அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு, தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்களின் மனங்களில் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த இவரது இத்தகைய கீழ்த்தரமான பேச்சு, தமிழ்நாட்டின் பண்பாட்டையும், அரசியல் நாகரிகத்தையும் அவமதித்துள்ளது.

அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 

இதைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி சார்பில், வரும் 16 ஏப்ரல் 2025, புதன்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம், தமிழ்நாட்டில் இத்தகைய அநாகரிக அரசியலுக்கு இடமில்லை என்பதை உரக்கப் பறைசாற்றும் வகையில் அமையும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, கழக மகளிர் அணி செயலாளரும், செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி தலைமை வகிக்க, கழக அமைப்பு செயலாளரும், செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி ளு. கோகுல இந்திரா முன்னிலையில் நடைபெறும்.

மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில், மகளிர் தலைமைக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள மகளிர் நிர்வாகிகள், மகளிர் அணி மாநில துணை நிர்வாகிகள், செய்தித் தொடர்பாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொள்ள உள்ளனர். மேலும், கழக மகளிர் அணியில் பணியாற்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பெருமளவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய அருவருப்பான வக்கிர சிந்தனைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் பெண்களின் கண்ணியத்தையும், தமிழ்நாட்டின் பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கும் மாபெரும் நிகழ்வாக அமையும்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தொடர்ந்து செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல் பட்டமும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர், 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.