’கும்பகோணம் மாநகராட்சிக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்’ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
”வரி வசூலிக்கும் அளவிற்கு அடிப்படை வசதிகளை இந்த திமுக அரசு நிறைவேற்றியுள்ளதா என கும்பகோணம் மக்கள் ஏமாற்றத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர் என விமர்சனம்”

கும்பகோணம் மாநகராட்சியின் நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்து வரும் ஜூலை 4ஆம் தேதி அன்று அதிமுக ஆர்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் 'மாடல் ஆட்சி'யின் நிர்வாகத் திறமையின்மையைக் கண்டித்தும், கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதைக் கண்டித்தும், வரும் ஜூலை 4, வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு கும்பகோணம், காந்தி பூங்கா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியான கும்பகோணம்: வசதிகள் இன்றி வரிச்சுமை அதிகரிப்பு
ஆட்சிக்கு வந்தவுடன், 2021 ஆம் ஆண்டு கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்தது திமுக அரசு. ஏற்கனவே அதிக சொத்து வரி செலுத்தி வந்த மக்களுக்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல், வீட்டு வரி, வணிக வரி, தொழில் வரி என அனைத்து வரிகளையும் உயர்த்தியுள்ளது திமுக அரசு. வரி வசூலிக்கும் அளவிற்கு அடிப்படை வசதிகளை இந்த திமுக அரசு நிறைவேற்றியுள்ளதா என கும்பகோணம் மக்கள் ஏமாற்றத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.