Mayiladuthurai: பூதாகரமாகும் மயிலாடுதுறை இரட்டை கொலை! காவல்துறையை சாடும் எதிர்கட்சிகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mayiladuthurai: பூதாகரமாகும் மயிலாடுதுறை இரட்டை கொலை! காவல்துறையை சாடும் எதிர்கட்சிகள்!

Mayiladuthurai: பூதாகரமாகும் மயிலாடுதுறை இரட்டை கொலை! காவல்துறையை சாடும் எதிர்கட்சிகள்!

Kathiravan V HT Tamil
Published Feb 15, 2025 01:32 PM IST

திரு.ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா? என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Mayiladuthurai: பூதாகரமாகும் மயிலாடுதுறை இரட்டை கொலை! காவல்துறையை சாடும் எதிர்கட்சிகள்!
Mayiladuthurai: பூதாகரமாகும் மயிலாடுதுறை இரட்டை கொலை! காவல்துறையை சாடும் எதிர்கட்சிகள்!

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய விற்பனயை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் ஹரிசக்தி மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். சாராய வியாபாரி ராஜ்குமார், தங்கதுரை ஆகிய 2 பேர் கைதான நிலையில், மூவேந்தன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

காவல்துறை விளக்கம்:-

இந்த சம்பவத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல; முன் விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறே சம்பவத்திற்கு காரணம் என காவல்துறை கூறி உள்ளது. தினேஷ், மூவேந்தன் ஆகியோர் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்து உள்ளது. சம்பவ தினத்தன்று மூவேந்தன் உள்ளிட்டோர் தினேஷிடம் தகராறு செய்து தாக்கி உள்ளனர். தடுக்க வந்த ஹரிஷ், சக்தி ஆகியோரை மூவேந்தன் உள்ளிட்டோர் கத்தியால் தாக்கியதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.

திரு. ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?

இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?

இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை தட்டிக் கேட்ட பொறியியல் கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சாராய விற்பனையையும், இரு படுகொலைகளையும் தடுக்கத் தவறிய காவல்துறை, அதற்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக உண்மையை மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கட்டுப்பாடில்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இதை அப்பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சக்தி, தினேஷ், ஹரிஷ், அஜய் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். இதனால் அவர்களுக்கும், கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் தான் சக்தி மற்றும் அவரது நண்பர்களை வம்புக்கு இழுத்த கள்ளச்சாராய கும்பல் அவர்கள் நால்வரையும் கத்தியால் குத்தியுள்ளது. அத்தாக்குதலில் மாணவர் சக்தி, ஹரிஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அஜய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதுடன், கள்ளச்சாராய வணிகர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டது தான் இந்தக் கொடிய படுகொலைகளுக்கு காரணம் ஆகும். ஆனால், வழக்கம் போலவே, இந்த கொடிய படுகொலைகளின் பின்னணியை மூடி மறைப்பதற்கு மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறை முயற்சி செய்து வருகிறது.

முட்டம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும், படுகொலை செய்தவர்களுக்கும் இடையே எந்த முன்பகையும் இல்லை என்றும், ஒரே தெருவில் வாழும் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு தான் படுகொலையில் முடிந்திருப்பதாகவும் காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. இது அப்பட்டமான பொய் ஆகும். எந்த முன்விரோதமும் இல்லாமல், சாதாரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதால் இருவர் படுகொலை செய்யப்பட்டனர் என்றால், அவர்களைக் கொலை செய்தவர்கள் எந்த நேரமும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தார்கள் என்று காவல்துறை கூறுகிறதா? எனத் தெரியவில்லை என தெரிவித்து உள்ளார். 

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.