Jaffar Sadiq Case: அமலாக்கத்துறை வைத்த முக்கிய கோரிக்கை.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..ஜாபர் சாதிக்கிற்கு ஷாக்!
Jaffar Sadiq Case: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் 9 ஆம் தேதி கைது செய்தனர்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தியது. அப்போது 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி அனுமதி அளித்தார்.
3 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில், ஜாபர் சாதிக் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை சார்பில், ஜாபர் சாதிக்கிடம் முழுமையாக விசாரணை முடியவில்லை. இதனால் விசாரணை நடத்த மேலும் 12 நாட்கள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அத்துடன் ஜூலை 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மீண்டும் நீதிமன்றத்தில் அஜர்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக இந்த வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்தாலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள இந்த வழக்கில் ஜாபர் சாதிக் கைதாகி உள்ளதால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது என்று கூறப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கின் பின்னணி என்ன?
இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை, உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் சர்வதேச நாடுகளுக்கு கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த மாரச் 15ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் டெல்லி போலீசாரும் சோதனை செய்தனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஜாபர் சாதிக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் மார்ச் மாதம் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
தீவிர தேடுதலுக்கு பிறகு டெல்லி மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்