Election 2024: 'மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமாகா கூட்டணி' உறுதி செய்தார் ஜி.கேவாசன்
மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் தாமாக கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமாகா கூட்டணி என ஜி.கேவாசன் உறுதி செய்தார்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பான பாஜக தனது அணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. நாளை பல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தமாக தலைவர் ஜிகே வாசன்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பாஜக கூட்டணியில் இடம் பெறுகிறோம். நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழர்களை மத்திய பாஜக அரசு விரும்புகிறது.
மேலும் விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழிலுக்கு பாஜக முக்கியத்துவம் அளித்து வருகிறது. படித்தவர்கள் இளைஞர்கள் மோடியின் ஆட்சிக்கு நல்ல ஆதரவு வழங்கி வருகின்றனர். பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. வாக்களித்த தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது.
அதேசமயம் பாஜகவுடன் நேற்று நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. விரைவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று அனைத்தும் நிறைவாகும் என்று தெரிவித்தார். பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் தொகுதி பங்கீடு முழு வடிவம் பெறும் வளமான பாரதம் அமைய விரும்பும் கட்சிகள் அனைத்தும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் தாமாக கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிக்கு இந்த முறை கோவைக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
அதே சமயம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வந்தாலும் கூட கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்க காத்திருக்கிறது. தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற சூழலில் யார் யாருடன் கூட்டணியில் அமைப்பார்கள், புதிய அணி உருவாகுமா? போன்ற பேச்சுக்கள் களத்தில் எழுத்தொடங்கி விட்டன. வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
பாமக, பாஜக கூட்டணியா? அல்லது அதிமுக கூட்டணியா? என்பதை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளது. அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணிகளை தொடங்கி அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. திமுக கூட்டணியில் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அந்த கட்சி தயாராகி வருகிறது.
இதனிடையே, டிடிவி தினகரனின் அமமுக, ஒபிஎஸ் அணியினர் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தையைத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொங்கு மண்டலம், டெல்டா பகுதி வட மற்றும் தென் மாவட்டங்கள் என அனைத்து மண்டலங்களிலும் போட்டியிட அமமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.