Ramadoss vs Anbumani: அடுத்த மாதம் வன்னியர் மாநாடு! அய்யா நிழலை பின் தொடர்வாரா சின்ன அய்யா? கடைசி நேர ட்விஸ்ட்?
வரும் மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடக்க உள்ள வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டுக்குள் எல்லா பிரச்னைகளையும் சரி செய்து, தந்தை, மகனை ஒரே மேடையில் ஏற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வரும் மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடக்க உள்ள நிலையில், டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக தைலாபுர தோட்டத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரகசிய கூட்டம் கூட்டும் அன்புமணி
இந்த பரபரப்பான சூழலில், ராமதாஸ் ஒரு அதிரடி முடிவை அறிவித்து கட்சியை உலுக்கி உள்ளார், அதேவேளையில் அன்புமணி ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி எதிர்நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ராமதாஸ், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து, "இனிமேல் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் நான்தான். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அன்புமணிக்கு மட்டுமல்லாமல், அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்புக்கு எதிராக திண்டிவனத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் கூடி போராட்டத்தில் குதித்தனர். ‘பாமகவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு விட்டது’ என பாமக பொருளாளர் திலகபாமா சமூகவலைத்தள பதிவிட்டு சூட்டை மேலும் கிளப்பி இருந்தார்.
ராமதாஸின் கோபத்திற்கு காரணம் என்ன?
பாமகவின் புதிய தலைவர் ராமதாஸ் நடத்திய இந்த செய்தியாளர் சந்திப்புக்கு பின்னணியாக, கட்சியின் எதிர்காலம் தொடர்பான ஒரு ரகசிய அறிக்கையும், சில முக்கிய தளபதிகளின் செயல்பாடுகள் குறித்து எழுந்த அதிருப்தியும் காரணமாக இருந்ததாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமனின் அரசியல் செயல்பாடுகள் அன்புமணியையும், அவரை சார்ந்தவர்களையும் கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டபோது, அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த மோதல் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் உச்சம் தொட்டது. "இது என்னுடைய கட்சி, நான் உருவாக்கிய கட்சி. நான் யாரிடம் கேட்க வேண்டும்?" என்று ராமதாஸ் கோபமாக பேசும் வீடியோக்கள் வலைத்தளங்களில் வைரல் ஆகின. அதன் பிறகு இந்த பிரச்னை ஓய்ந்துவிட்டது என்று நினைக்கும்போது, அணையாத நெருப்பாக அப்படியே இருப்பது, ராமதாஸின் அறிவிப்பு மூலம் தெரிய வருகிறது.
இரவு நடந்த வாக்குவாதம்
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு ராமதாஸ்-அன்புமணி இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும், அமித்ஷா தமிழகம் வரும் நிலையில், அன்புமணி பாஜகவுடன் கூட்டணியை பகிரங்கப்படுத்துவார் என்ற அச்சம் ராமதாஸை இந்த முடிவுக்கு தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
அன்புமணியை மையப்படுத்தி வந்த ரகசிய அறிக்கைகளும் இந்த முடிவுக்கு வலு சேர்த்தன. "அன்புமணி தலைவராக இருந்த பிறகு, பாமகவின் வாக்கு விழுக்காடு குறைந்துள்ளது. வட மாவட்டங்களில் கூட பெரிய தாக்கம் இல்லை. முன்பு 15-18 எம்எல்ஏக்களை வென்ற கட்சி, இப்போது வெறும் 5 எம்எல்ஏக்களுடன் சுருங்கிவிட்டது" என்று அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டியதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தென் மாவட்டங்களில் கட்சியை வளர்க்க முடியாததும், இளைஞர்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லாததும் ராமதாஸுக்கு கவலையை ஏற்படுத்தியது. இதனால், தனது பேரன் முகுந்தனை இளைஞர் பொறுப்புக்கு கொண்டுவந்தபோதும், அன்புமணியின் எதிர்ப்பு மோதலை தீவிரப்படுத்தியது.
அன்புமணியின் எதிர்நடவடிக்கை
ராமதாஸின் இந்த முடிவு அன்புமணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தாலும், அவர் உடனடியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். "தலைவர் பதவியை மாற்றுவது பொதுக்குழு மற்றும் நிர்வாக குழுவில் விவாதிக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படி அறிவிப்பது விதிமுறைக்கு உட்பட்டது அல்ல" என்று அவரது ஆதரவாளர்கள் வாதிட்டனர். இருப்பினும், அன்புமணி, "இப்போதைக்கு எதுவும் வேண்டாம். அமைதியாக இருப்போம்" என்று கூறி, பொறுமையை கடைபிடிக்க முடிவு செய்தார்.
இதற்கிடையே, கட்சியின் பொருளாளர் திலகபாமா, "ஐயாவிடம் இருந்து இப்படியான முடிவை எதிர்பார்க்கவில்லை. இது சரியல்ல" என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். சில இடங்களில் ராமதாஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. ஆனால், "இப்போது எதிர்ப்பு தெரிவித்தால் பிரச்சனை பெரிதாகிவிடும். கொஞ்சம் பொறுமையாக இருப்போம்" என்று அன்புமணி தனது குழுவை அமைதிப்படுத்தியதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத்திலும் இந்த மோதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸின் மகள்கள் ஆலோசனையும் நடத்தி உள்ளனர். சௌமியா அன்புமணிவிற்கு கட்சியில் அளிக்கப்படும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அன்புமணியை முற்றிலுமாக பதவியில் இருந்து நீக்குவது தவறு" என்று அவர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
சமாதான முயற்சிகள்
தற்போது, பாமகவில் அமைதி நிலவினாலும், சமாதான முயற்சிகளை மேற்கொள்ள ஒரு தனி குழு செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடக்க உள்ள வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டுக்குள் எல்லா பிரச்னைகளையும் சரி செய்து, தந்தை, மகனை ஒரே மேடையில் ஏற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. "கட்சி பிரச்சனையை தாண்டி, குடும்பத்தில் எழுந்த அதிகாரப் போட்டியே இந்த விரிசலுக்கு காரணம்" என்றும் பேசிக் கொள்கின்றனர்.
