‘போலீஸூக்கு தண்டனை கொடுக்கும் ஸ்டாலின் அரசுக்கு மரண அடி’ ஆலங்குடியில் எடப்பாடி ஆவேசம்!
ஸ்டாலின் முதல்வராகி 50 மாதம் ஆகிவிட்டது. ஏதாவது செய்தார்களா? இங்கு அமைச்சர் ஒருவர் இருக்கிறார். இந்த அமைச்சர் ஒரு பகுதிக்குப் போயிருக்கார், அங்கு கலால் டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் கேட்டார், அதை பறித்துள்ளனர், பணி செய்யவிடாமல் தடுத்து நேர்மையான அதிகாரியை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கந்தர்வக்கோட்டையில் மக்கள் சந்திப்பு நடத்தினார். இதையடுத்து அறந்தாங்கி செல்லும் வழியில் ஆதனக்கோட்டை தஞ்சாவூர் - மானாமதுரை சாலையில், சாலையோர தொழிலாளர்களைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச் சொன்னார் . அங்கிருந்த பெண் வியாபாரிகளை அழைத்து முந்திரி பருப்பு வாங்கிக்கொண்டு அதற்கான தொகையைக் கொடுத்தார். அப்போது அவர்கள் பணம் வாங்க மறுக்கவே, ' இது தப்பும்மா வாங்கிக்கோங்க' என்று உரிமையுடன் வற்புறுத்தி தொகையைக் கொடுத்தார்.
ஆலங்குடிக்குச் செல்லும் வழியில் மாத்தூரில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும், பேருந்தின் உள்ளிருந்தே பேசத் தொடங்கினார் இபிஎஸ். “இந்தப் பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. எனவே அதிமுக அரசு இருக்கும்போது காவிரி - குண்டாறு திட்டம் கொண்டுவந்தோம். அதற்கு முதல்கட்டமாக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. திமுக அரசு அந்தத் திட்டத்தை முடக்கிவிட்டது. மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் இத்திட்டம் தொடங்கப்படும். விவசாயத் தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், மாடுகள், ஆடுகள், பல திட்டங்கள் கொண்டுவந்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கான தேவையான திட்டங்கள் கொண்டுவந்து சேர்ப்போம்’’ என்று உறுதி அளித்துக் கிளம்பினார்.
அடுத்ததாக ஆலங்குடி - புதுப்பட்டி-கறம்பக்குடி சாலையில் மக்களை சந்தித்த இபிஎஸ், “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, எதிரிகளுக்கு நம்மை எதிர்க்க சக்தியில்லை என்பதை உணர்வார்கள். ஸ்டாலின் பகல்கனவு காண்கிறார் 200 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லும் என்று நினைக்கிறார். ஸ்டாலின் அவர்களே எங்கிருந்தாலும் டிவியில் ஆலங்குடி மக்களின் எழுச்சியைப் பாருங்கள். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வென்று வரலாற்றுச் சாதனை வெற்றி பெறும். நமது வெற்றியின் ரகசியம் இப்போதே தெரிந்துவிட்டது. இந்த கூட்டத்தை வெற்றி விழா காட்சி போலவே பார்க்கிறேன்.
