டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் செல்ல நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்கள் முறையாக தூர் வாரப்பட்டு, ஜூன் மாதம் 12-ஆம் தேதியன்று, மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் கடைமடை பகுதிகளைச் சென்றடையும்.
இந்த ஆண்டு காவிரி படுகைகளில் எந்தவித தூர்வாரும் பணிகளையும் செய்யாமல், வீண் ஜம்பத்திற்காகவும், வெற்று விளம்பரத்திற்காகவும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி ஜூன் 12-ந் தேதி மேட்டுர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டார். அந்தத் தண்ணீர் காவிரி படுகை முழுவதும் தடையின்றி பயணம் செய்து கடைமடை வரைச் செல்லும் நிலை உள்ளதா என்பதை சிந்தித்துப் பார்க்காமல் ஸ்டாலின் செயல்பட்டது டெல்டா பாசன விவசாயிகளைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.