‘அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன்.. ஓபிஎஸ் வருவார்களா?’ உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன்.. ஓபிஎஸ் வருவார்களா?’ உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி!

‘அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன்.. ஓபிஎஸ் வருவார்களா?’ உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Jul 16, 2025 05:14 PM IST

‘அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே கூறினார். நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். இந்த கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? நான் தலைமை தாங்குகிறேன். நான் எடுப்பதுதான் முடிவு’

‘அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன்.. ஓபிஎஸ் வருவார்களா?’ உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி!
‘அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன்.. ஓபிஎஸ் வருவார்களா?’ உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி! (PTI)

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், ‘’ஏற்கனவே அம்மா அவர்கள் வருவாய்த் துறையில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதில் ஸ்டிக்கர் ஒட்டி 46 திட்டங்களகை் குறிப்பிட்டு முதல்வர் விளம்பரம் செய்கிறார். மக்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது, இதையெல்லாம் நான்காண்டுகளாக ஏன் சரி செய்யவில்லை..?

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில் கிராம் கிராமமாகச் சென்று மக்களிடம் மனு வாங்கினார். ஆட்சி வந்ததும் தீர்ப்பேன் என்றார். ஏன் தீர்க்கவில்லை. இப்போது மீண்டும் மனு வாங்குகிறார் என்றால் மக்களுடைய பிரச்னைகள் இன்னமும் தீரவில்லை என்பதை முதல்வரே ஒப்புக்கொள்கிறாரா…? இன்னும் எட்டு மாதங்களில் என்ன பிரச்னைகளைத் தீர்க்க முடியும். 2026 தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த திட்டத்தைக் கொண்டு வருகிறார்

1 கோடி மனுக்கள்: வெள்ளை அறிக்கை வேண்டும்

அரசு சம்பந்தப்பட்ட உண்மையை அப்படியே சொல்ல வேண்டும். 1 கோடியே 5 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 1 கோடியே 1 லட்சம் மனுக்கள் தீர்வு காணப்பட்டதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் இத்தனை மக்கள், விவசாயிகள் மீண்டும் எதற்காக குறை சொல்கிறார்கள். 1 கோடி மனுக்கள் குறித்து வெள்ளை அறிக்கை கொடுங்கள். அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளாக மாறிவிடக் கூடாது. கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் உள்ளவர்ர்கள் சொன்னால் மட்டுமே மக்கள் நம்புவார்கள் என்பதால், அதிகாரிகளை தவறாக பயன்படுத்துவது சரியில்லை. அதனால்தான், தவறாக செய்தி வெளியிட்டால் அதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தான் பொறுப்பு என்று கூறினேன்..’’ என்று கூறினார்.

பாஜகவிடம் அதிமுக அடகு வைக்கப்பட்டது என்ற திமுக விமர்சனம் குறித்த கேள்விக்கு, ‘’நான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயத்தில் என்ன செய்ய முடியும்? மக்கள் பிரச்சினைகளை பேசிக் கொண்டிருக்கிறேன். இன்றைய முதலமைச்சரின் தந்தை 1999 எம்.பி. தேர்தல், 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தானே கூட்டணி வைத்தார்? அதிமுகவுடன் பாஜக சேர்ந்துவிட்டதைக் கண்டு ஸ்டாலினுக்கு இப்போது தோல்வி பயம் வந்து விட்டதால் ஏதேதோ பேசுகிறார். திமுக கூட்டணி வைக்கும் போது நல்ல கட்சி. அதிமுக கூட்டணி வைக்கும் போது மதவாதக் கட்சியா?’’ என்று கேட்டார்.

டிடிவி தினகரன் கூட்டணியில் இருப்பாரா?

டிடிவி தினகரன் பற்றிய கேள்விக்கு, ‘’நாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரும்’’ என்றார்.

அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு, ‘’அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே கூறினார். நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். இந்த கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? நான் தலைமை தாங்குகிறேன். நான் எடுப்பதுதான் முடிவு. அதனால் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம். இருவரும் அமர்ந்து தெளிவுபடுத்திவிட்டோம். தோண்டித் தோண்டி விரிசலை ஏற்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். ஒன்றும் முடியாது. இந்தக் கூட்டணி தெளிவான கூட்டணி. பிரமாண்ட வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்.

திமுகவை அப்புறப்படுத்த மக்கள் தயாராகிட்டாங்க. மக்கள் முகம் பிரகாசமாக இருப்பதே வெற்றிக்கு அறிகுறி. அவங்க கூட்டணி பலம் குறையுது. திமுக செய்கிற தவறுகளுக்கு கூட்டணிக் கட்சிகள் உடந்தையாக இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்" என்றார்.

ஓபிஎஸ்., கதை முடிந்து விட்டது

இதையடுத்து பா.ம.க. குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘’பாமக கூட்டணிக்கு வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். இன்னமும் அவர்கள் கூட்டணியில் இணையவில்லை…’’ என்றார். பாமகவில் நிலவும் குழப்பம் குறித்த கேள்விக்கு, ‘இது மற்ற கட்சி பிரச்னை. அதில் நான் எப்படி கருத்து சொல்ல முடியும்?’’ என்று கேட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் பற்றிய கேள்விக்கு, ‘’அது முடிந்துபோன பிரச்னை’’ என்று கூறியதோடு பேட்டியை முடித்துக்கொண்டார்.