‘பரிதவிக்கும் பல்கலை.,கள்.. அல்லாடும் அரசு கல்லூரிகள்..’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘பரிதவிக்கும் பல்கலை.,கள்.. அல்லாடும் அரசு கல்லூரிகள்..’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

‘பரிதவிக்கும் பல்கலை.,கள்.. அல்லாடும் அரசு கல்லூரிகள்..’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Jun 03, 2025 06:53 PM IST

‘தேவையற்ற வழக்குகளுக்கு, உச்சநீதிமன்றம் சென்று இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடும் இந்த விளம்பர மாடல் அரசு, தமிழக இளைஞர்களின், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வித் துறையின் வழக்குகளை ஏன் முடிக்க முயலவில்லை என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்’

‘பரிதவிக்கும் பல்கலை.,கள்.. அல்லாடும் அரசு கல்லூரிகள்..’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
‘பரிதவிக்கும் பல்கலை.,கள்.. அல்லாடும் அரசு கல்லூரிகள்..’ எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

கடும் பின்னடைவில் உயர்கல்வி

‘‘2021-ல் நிறைவேற்ற முடியாத 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல் வழியே ஆட்சியைப் பிடித்து, விளம்பர ஆட்சி நடத்தி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் கீழ் உள்ள உயர்கல்வித் துறையின் நிர்வாகத் திறமையின்மையால் பல்கலைக்கழகங்களும், அரசு கல்லூரிகளும் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றன.

பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கும் அவலம், பேராசிரியர்களுக்கு ஊதியமின்மை, பணி நிரந்தரமின்மை, நிதிப் பற்றாக்குறை, முறைகேடுகள் மற்றும் மாணவர் சேர்க்கை குறைவு போன்ற முக்கிய பிரச்சினைகளால் தமிழக உயர்கல்வித் துறை சீரழிந்துள்ளது என்று கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தேவையற்ற வழக்குகளுக்கு செல்கிறார்கள்

துணை வேந்தர் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால், அண்ணா, அண்ணாமலை, சென்னை, மதுரை காமராஜர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை காலியாக உள்ளன. தேவையற்ற வழக்குகளுக்கு, உச்சநீதிமன்றம் சென்று இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடும் இந்த விளம்பர மாடல் அரசு, தமிழக இளைஞர்களின், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வித் துறையின் வழக்குகளை ஏன் முடிக்க முயலவில்லை என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இரண்டு ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

நிதிப் பற்றாக்குறை மற்றும் ஊதியப் பிரச்சினைகளால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஊதியம்/ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமன முறைகேடுகள் மற்றும் ஊதியப் பிரச்சினைகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. மகளிர் ஆய்வு மையம் உள்ளிட்ட பல இடங்களில் 6 மாதங்களுக்குமேல் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போது, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று போராடி வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்

160 அரசு கல்லூரிகளில் சுமார் 8000-த்திற்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், கடந்த 3 ஆண்டுகளாக காலியாக உள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆய்வக உதவியாளர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ளன. இதனால் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளது; படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், பாரதிதாசன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெறுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக ஆய்வாளர்கள் புகார் அளித்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விளம்பரத்தால் கல்வி மேம்படாது

நிர்வாகப் பிரச்சினைகளால் மாணவர் சேர்க்கை 2024-25 கல்வியாண்டில் கடுமையாகக் குறைந்துள்ளது. தற்போது இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளையே நிர்வாகம் செய்ய இயலாத நிலையில், பல கல்லூரிகளில் பல பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டது என்று அந்த பாடப் பிரிவுகளையே மூடிக்கொண்டிருக்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, நிதிப் பற்றாக்குறை என்று பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்காத இந்த அரசு, தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக தனது தந்தையின் பெயரால் ஏதாவது ஒரு கல்விச் சாலை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக, திருவாரூரில் புதிய பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்றும், நான்கு ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு, ஆட்சியின் கடைசியில் புதிய கல்லூரிகள் திறக்கப்படும் என்று வெற்று விளம்பரம் செய்யும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் கூற்றை தமிழக மக்கள், மாணவர் சமுதாயம் நம்பத் தயாராக இல்லை.

ஏற்கெனவே சுமார் 50 சதவீதத்திற்குமேல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத சூழ்நிலையில், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு புதிதாக தோற்றுவிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரிகளுக்கும் எப்படி பேராசிரியர்களை நியமிக்கும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும், குறிப்பாக, மாணவ சமுதாயத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய உயர்கல்வி மாணவர்களின் திறனை மேம்படுத்த வக்கில்லாத பொம்மை முதலமைச்சர், நான் முதல்வன், தமிழ் புதல்வன் என்று வெற்று விளம்பரம் செய்வதால் மட்டும் மாணவர்களின் கல்வி மேம்படாது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 5 வேளாண் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டு, அகில இந்திய அளவில் உயர்கல்வியில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை, தமிழகம் 2019-20ஆம் கல்வி ஆண்டிலேயே அடைந்தது. மேலும், கொரோனா பெருந்தொற்றின்போது, மாணவர்கள் கல்வி கற்க இயலாத சூழ்நிலையில், உயர்கல்வி மாணவர்களுக்கு விலையில்லா 2 GB டேட்டா கார்டு வழங்கி 'ஆன்லைன்' கல்வி முறையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயின்றிடவும், 'ஆல் பாஸ்' என்ற அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களின் 'கல்வி இடைநிற்றலை' தடுத்து நிறுத்தியது எனது தலைமையிலான அம்மாவின் அரசு. இதனால்தான் கொரோனா பெருந்தொற்றின்போது, உயர் கல்வி சேர்க்கையில் இடைநிற்றல் தமிழகத்தில் நிகழவில்லை என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்

உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் படிப்பு முடித்தவுடன், தகுதிக்கேற்ப அரசு மற்றும் தனியார் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கும் வகையிலும், நான் சட்டமன்றத்தில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் வலியுறுத்தியவாறு, காலியாக உள்ள லட்சக்கணக்கான அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களிடையே தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க வலியுறுத்துகிறேன்.

ஆனால், விடியா திமுக ஸ்டாலின் மாடல் விளம்பர அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உயர்கல்வித் துறை நிர்வாகச் சீர்கேட்டாலும், நிதிப் பற்றாக்குறையாலும், துணை வேந்தர் நியமனங்கள் தாமதத்தினாலும், காலிப் பணியிடங்களை நிரப்பாததாலும் மற்றும் பிற காரணங்களாலும் உருக்குலைந்துள்ளது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, துணை வேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்பிடவும், அதுவரை தற்காலிகமாக, சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர் குழுவை நியமித்து உயர்கல்வி மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்த வலியுறுத்துகிறேன்.

'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை'

என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, நம் மாணவச் செல்வங்களுக்கு அழியாத கல்விச் செல்வத்தை கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் எனும் ஆசான்கள். அந்த தெய்வங்களின் வயிற்றில் அடிக்கும் வேலையில் இந்த விளம்பர மாடல் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளது மன்னிக்க முடியாத கொடுஞ் செயல். தன்னலமில்லாமல் அறிவை அள்ளி வழங்கும் ஆசிரியப் பெருமக்களின் எரியும் வயிறு, இந்த ஆட்சியாளர்களை சுட்டெரிக்காமல் விடாது என்று எச்சரிக்கிறேன்,’’

என்று அந்த அறிக்கையில் எடப்பாடி K.பழனிசாமி தெரிவித்துள்ளார்.