‘இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை’ எடப்பாடி பழனிசாமி சாடல்!
‘சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்’

‘நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி!’ என, எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை இதோ:
‘‘கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு.
சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை! இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை. பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா?