’மாற்றத்திற்கான பயணம்! தவெக உடன் கூட்டணியா?’ ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி!
”எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை வரும் 7-ம் தேதி கோவை மாவட்டம மேட்டுப்பாளையத்தில் தொடங்கவுள்ளார்”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொடங்கவுள்ள தனது மாநிலளாவிய சுற்றுப்பயணம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம், திமுக ஆட்சியின் குறைபாடுகளை மக்களிடையே அம்பலப்படுத்தி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைப்பது என அவர் தெரிவித்தார்.
எழுச்சி பயணத்தின் நோக்கம்
எடப்பாடி, தனது சுற்றுப்பயணத்தை "எழுச்சி பயணம்" எனக் குறிப்பிட்டு, இது தேர்தல் பிரச்சாரம் மட்டுமல்ல, மக்களிடையே நம்பிக்கை விதைப்பதற்கான முயற்சி என விளக்கினார். "தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்கள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்றவை தினந்தோறும் நடக்கின்றன. இந்தக் கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம்," என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "கடந்த 50 மாதங்களாக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பல துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர். இந்தக் கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதே எனது லட்சியம்," என்றார். இந்தப் பயணம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாகச் சந்தித்து, திமுக ஆட்சியின் தோல்விகளை எடுத்துரைக்கும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.